இந்திய பெருங்கடல் நாடுகளான செஷல்ஸ், மொரீசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டாலும், இலங்கைக்கான அவரது பயணம் கொஞ்சம் வேறுபட்டது என்று விமர்சிக்கப்படுகிறது.
வெளியுறவு நிபுணர்கள் கூறுவது போல், “இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு “வேகத்தடை’ போடவே மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது” என்ற கருத்து நூற்றுக்கு நூறு உண்மை தான். ஆனால், இலங்கை பயணத்துக்கான அளவுகோல் மட்டும் மாறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
மொரீசியஸில் நிறைய இந்தியர்கள் இருந்தாலும், அவர்கள் பிரிட்டீஷ் காலத்தில் கரும்பு தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக, இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இதைத் தாண்டி அங்கு இந்தியர்கள் வசிப்பதற்கு பாரம்பரிய காரணங்கள் இல்லை.
என்ன வித்தியாசம்: ஆனால் இலங்கை விவகாரமே வேறு. அங்கு வசிக்கும் இந்தியர்கள், அதாவது தமிழர்கள் பூர்வீக குடிமக்கள். இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். இன்னமும் தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் தாங்கிப் பிடிப்பவர்கள். இலங்கை தமிழனுக்கு சளி பிடித்தால் இந்திய தமிழன் தும்முகிறான். அவன் சோகத்தில் தாடி வளர்த்தால், இவன் கோபத்தில் கவிதை எழுதுகிறான்.
இலங்கை தமிழர்களுக்கும் இந்திய தமிழர்களுக்கும் வர்த்தக உறவு முதல் விவாக உறவு வரை இப்போதும் உண்டு. இலங்கை தமிழன் பெயரைச் சொல்லி இந்தியாவில் நிறைய தலைவர்கள், அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், இலங்கை தமிழர் பிரச்னையே, ஓட்டுகளைப் பெற்றுத் தரும் விஷயமாக கருதப்படுகிறது. இலங்கை தமிழனுக்காக கண்ணீர் வடிக்காவிட்டால், அவர் திராவிட தலைவரே இல்லை என்ற போலிச்சாயம் பூசப்பட்டு விட்டது.
தமிழக மக்களிடம் செல்வாக்கை இழந்த பிறகு, காங்கிரஸ் கட்சியும் இதே ஆயுதத்தைப் பயன்படுத்தி வளர நினைத்தது.
அது இந்திராவின் காலத்தில். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் தங்களுக்கு தான் என அவர் நினைத்தார். இதற்காகவே தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாக பயிற்சியும் நிதி உதவியும் அளித்தார்.
அவரது மகன் ராஜிவும் இதே பாணியை பின்பற்றினார். இந்திராவை விட ஒரு படி மேலே போய், இலங்கை எல்லைக்குள் இந்திய போர் விமானங்களை அனுப்பி, உணவு பொட்டலங்களை வீச வைத்தார்.
ஆனால் என்ன ஒரு சோகம், அவர்களது வீர சாகசங்கள் இந்திராவுக்கும் ராஜிவுக்கும் தமிழ்நாட்டில் வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை.
இப்போது மோடியின் ராஜதந்திரம், இந்தியாவில் தமிழர்களின் வாக்குகளை பா.ஜ.,வுக்கு பெற்றுத் தருமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
பிரதமராக பதவி ஏற்றதும் மோடிக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில், இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனர்களைக் காப்பாற்றும் கோதாவில் இறங்கினார் மோடி.
சீனாவுக்கு வாலையும் இந்தியாவுக்கு தலையையும் காட்டிக்கொண்டு இருந்த ராஜபக்சே மீது கடும் அழுத்தத்தைக் கொடுத்து, கெஞ்சியும் மிரட்டியும் காரியத்தை சாதித்தது இந்தியா. பா.ஜ., கட்சியினர், இதை ஓரளவு எடுத்துச் சொல்லி, மோடியின் சாதனையாக தமிழக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர்.
ஆனாலும் எதிர்பார்த்த தமிழக வாக்குகள் பா.ஜ.,வுக்கு கிடைக்கவில்லை என்பது அடுத்து நடந்த இடைத்தேர்தலில் தெரிந்தது.
தற்போது, மோடியின் இலங்கை பயணத்தையும் கட்சியை வளர்ப்பதற்கு பயன்படுத்த பா.ஜ., நினைக்கிறது. இதன் அடிப்படையிலேயே மோடியின் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தம்; குறிப்பாக தமிழர் பகுதிகளில் ஏற்கனவே இந்திய உதவியுடன் நடந்து வரும் திட்டங்களை வேகம் எடுக்க உதவுதல்; யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்களுடன் மோடியின் சந்திப்பு; தமிழர் பகுதிகளில் ராணுவத்தின் நடமாட்டத்தை குறைப்பது; தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம்; தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்று தாய்த்தமிழகத்தின் மனங்கவரும் திட்டங்கள் நிறையவே இருக்கின்றன என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.


0 Comments