காங்கேசன்துறை மற்றும் அருகம்பே பகுதிகளிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும் பொருட்செலவில் மாடமாளிகைகளை உருவாக்கியுள்ளதாக பாராளுமன்றிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவை தனக்காகக் கட்டப்பட்ட மாளிகைகள் இல்லை, ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட சர்வதேச மாநாட்டு மண்டபங்கள் என விளக்கமளித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
யாழ். கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த ஜனாதிபதி மாளிகையொன்று 1980ம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அழிக்கப்பட்ட பின்னர் அந்தக் கட்டிடம் மீள எழுப்பப் படவோ அல்லது புதிய ஜனாதிபதி மாளிகையொன்று அங்கு நிறுவப்படவோ இல்லையென தெரிவித்திருக்கும் அவர், தற்போது பிரச்சாரப்படுத்தப்பட்டு வரும் கட்டிடங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் போன்று ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட இன்னுமொரு மண்டபம் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதியுடனேயே அவை நிறுவப்பட்டதாகவும் சர்வதேச விருந்தாளிகளுக்கேற்ற வசதி வாய்ப்புகளுடன் அவை உருவாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளமையும் அனேகமாக நாடுகளுடன் முறுகல் நிலையையே மஹிந்த அரசாங்கம் பேணி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments