பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரூனை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்தார்.
எலிசபெத் மகாராணியின் அழைப்பை ஏற்று பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பு தின நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசினார்.
பிரிட்டிஷ் பிரதமரைச் சந்தித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் குறித்து பேசினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளை வரவேற்றிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரிட்டன் விரும்புகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய டேவிட் கமரூன், புதிய ஜனாதிபதி மீது பிரிட்டன் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். இலங்கைக்குள் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக புதிய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தமக்கு அந்த நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஜனாதிபதியின் முன்முயற்சிகளை பிரிட்டன் ஆதரிப்பதாக தெரிவித்த கமரூன், மறுசீரமைப்பு, ஊழல் ஒழிப்பு, பிரிந்துகிடந்த இலங்கையை ஒன்றாக்குவதற்கான முயற்சிகள் என புதிய அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் கூறினார்.
இலங்கையின் வடக்கே இராணுவத்தின் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதி தமிழர்களுக்கு திருப்பித் தரப்படுவது, சிவில் நிர்வாகத்தில் இருந்து இராணுவமயமாக்கலை அகற்றும் நோக்கில் ஆளுநர்களாக இருந்த இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதில் சிவிலியன்களை ஆளுநர்களாக நியமித்திருப்பது, மீள்குடியேற்றத்துறைக்கு தமிழர் ஒருவரையே அமைச்சராக நியமித்திருப்பது போன்ற நவடிக்கைகளை இணைத்துப் பார்க்கும்போது இவை நல்ல ஆரம்பம் என்று தாம் கருதுவதாக கமரூன் தெரிவித்தார்.
இலங்கையின் மீள் குடியேற்றம் மற்றும் இணக்கப்பாடு தொடர்பிலான இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் புதிய ஜனாதிபதி முன்னெடுக்கவேண்டும் என்று கூறிய கமரூன், அதற்குத்தேவையான ஒத்துழைப்பை பிரிட்டன் வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையுடன் பிரிட்டனுக்கு வரலாற்று ரீதியாக வலுவான உறவு நீடிப்பதாக தெரிவித்த கமரூன், புதிய ஜனாதிபதி தனது மறுசீரமைப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்துவது போன்ற தனது முன்னெடுப்புக்களை தொடர்வார் என்று நம்பிக்கை வெளியிட்டார். அதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

0 Comments