Subscribe Us

சமூகத்துக்கு சேவைசெய்ய, அரசியல் ஓர் அச்சாணி அல்ல


அரசியலில் ஈடுபடுகின்ற போது தனி மனிதனாய் செய்யும் சமூக சேவையை விடவும் அதிகமானதை செய்யலாம். சில நேரங்களில் தனி மனிதனால் பெற முடியாத சில விடயங்களையும், சந்திக்க முடியாத சில மனிதர்களையும் அரசியல்வாதி எனும் அடையாளம் இருக்கின்ற போது பெறவும், சந்திக்கவும் முடிகிறது.


சமூக சேவைக்கு அரசியல் ஒரு 'உந்து' சக்தியே தவிர, முழு சமூக சேவையும் அரசியல் எனப் பொருள்கொள்வது தவறானது.

தனி மனிதராய் நின்று இலங்கை சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்தவர் தான் பேருவளையை சேர்ந்த மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள். ஏழை குடும்பத்தில் பிறந்து வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து அயராத உழைப்பாலும், விடாமுயற்சியாலும் படிப்படியாய் வாழ்வில் முன்னேறியவர், தான் உழைத்த செல்வம் மூலம் மக்களுக்கு சேவை செய்த செம்மல்.

இலங்கையில் இன்று காணப்படும் 'சுப்பர் மார்க்கெட்' வர்த்தகத்திற்கும் முன்னோடி இவர் என்பது நம்மில் பலர் அறியாத விடயம், 'பைரஹா' எனும் பெயரில் 'சுப்பர் மார்க்கட்' வர்த்தகம் ஆரம்பம் செய்து அது பின்னாளில் தடைபட்டுப்போனது. அப்பெயரில் இன்று மிகப்பெரிய இறைச்சி உணவு தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.

நளீம் ஹாஜியார் மூலம் நன்மை பெற்றவர்கள் இன்று இலங்கையின் பல கிராமங்களிலும் உள்ளார்கள். இவர் கல்விக்கு செய்த மாபெரும் சேவை தான் பேருவளையில் அமைந்துள்ள 'நளீமியா கலாபீடம்'. தான் பெறாத கல்வியை மற்றவர்கள் பெற வேண்டும் எனும் உயரிய நோக்கோடு ஆரம்பித்தார். இன்று இதற்கு ஒப்பான முஸ்லிம்களுக்கான ஒரு கலாசாலையை நான் இலங்கையில் காணவில்லை.

'நளீமியாவில்' படித்த பலர் இன்று வெளிநாட்டு தூதரகங்களில் அதிகாரிகளாக (உதா: கலாநிதி இனாமுல்லாஹ் மசீஹுடீன்), பிரதேச செயலாளர்களாக (உதா: எம்.ஆர்.எம். மலிக் - புத்தளம் பி.செ.) இன்னும் ஆளுநர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், உலமாக்கள் இன்னும் பலர் பல துறைகளில் மின்னுகின்றனர்.

இதை போன்று இவர் செய்த இன்னுமொரு கல்வி சேவை தான் 'இக்ராஹ்' தொழிநுட்ப கல்லூரி. இதன் மூலம் பல தொழிநுட்பவியலாளர்கள் உருவாகி உள்ளார்கள், இன்னும் உருவாகுவார்கள் 'இன்ஷாஅல்லாஹ்'.

இவற்றுக்கெல்லாம் மேலாக புலமைப் பரிசு நிதியம், ஏழை குடும்பங்களுக்குத் திருமணம், வீடுகள் அமைத்து கொடுத்தல் என்று பல சேவைகளை முழு இலங்கை மக்களுக்கும் செய்துள்ளார். அவரால் பயன் பெற்றோர் இலங்கை முழுவதும் உள்ளனர்.

இவை அனைத்தையும் அவர் அரசியலுக்கு அப்பால் நின்று சொந்த உழைப்பின் மூலமே செய்தார், ஆனால் பல அரசியல்வாதிகளோடு தொடர்புகளை பேணி வந்தார். அப்படி ஒரு 'ஆளுமை' மிக்கவராய் முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல, பிற சமூகங்களும் இவரை கண்டது. 

தான் மரணித்த பின்பும் தன்னை எல்லோரையும் அடக்கும் இடத்தில் அடக்கம் செய்யாமல் 'நளீமியா வளாகத்தில்' அடக்கம் செய்யும் படி ஒரு 'தூர நோக்கான' விடயத்தை மரணிப்பதற்கு முன்பே கூறி வைத்திருந்தார்.

இப்படி வியாபாரம், சமூக சேவை இரண்டிலும் நான் முன்மாதிரியாய் கொள்ளும் ஒரு மனிதர் மர்ஹூம் நளீம் ஹாஜியார அவர்களாவார்.

அல்லாஹ் அன்னாருக்கு 'ஜன்னதுல் பிர்தவ்ஸ்' எனும் சுவனத்தை வழங்குவானாக.. !

- முஹம்மத் இன்பாஸ் -

நன்றி -TPT-

Post a Comment

0 Comments