இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்க இந்திய அரசும் மக்களும் ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த இந்தியப் பிரதமர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு புதிய அனுகுமுறையாக அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நடைபெறவிருக்கும் உலக கிண்ண போட்டியில் கலந்துகொள்கின்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட இந்திய பிரதமர், 1996ஆம் ஆண்டு போன்று இம்முறையும் இலங்கை அணி உலக கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பெப்ரவரி மாதம் 15 முதல் 18 வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது மைத்திரிபால சிறிசேன இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திப்பார். அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புத்தகயா விஹாரையையும் திருப்பதி கோவிலையும் தரிசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.


0 Comments