முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸ அடுத்த இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஷி வீரவன்ஸ, கடந்த காலங்களில் இரண்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியுள்ளதுடன் அவற்றை பெறுவதற்காக வழங்கிய தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணானவை என கண்டறியப்பட்டன.
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகியதுடன் புலனாய்வுப் பிரிவினருக்கு அது சம்பந்தமாக முறைப்பாடு கிடைத்தது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் பிரதிபலனாக சஷி வீரவன்ஸ கைது செய்யப்பட உள்ளார்.
போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டுக்கள் பெற்றமை தொடர்பில் நடத்திய விசாரணைகளில் மேலும் இரண்டு விடயங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்த இரு விடயங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்ததும் வீரவன்ஸவின் மனைவி கைது செய்யப்படுவார் என்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நுகேகொடையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ஸ, தனது மனைவியிடம் வாக்குமூலத்தைக் கூட பதிவு செய்து கொள்ள பொலிஸ் அதிகாரிகள் வரவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் வீட்டுக்கு வரும் வரையில் காத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

0 Comments