ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளில் பிரதான பங்கை வகிக்கவுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருந்துவந்தார். மகிந்த தலைமையில் மூன்றாம் கூட்டணியொன்று உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்கால அரசியல் நிலைவரங்களைக் கருத்தில்கொண்டு அவர் இவ்வாறானதொரு முடிவுக்கு வந்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்காவிட்டால், அக்கட்சியில் உள்ள பலர் மகிந்தவின் பக்கம் செல்லக்கூடும்.
அத்துடன் சுதந்திரக் கட்சியும் இரண்டாக உடையும் நிலை ஏற்படுமென கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின்போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே கட்சியின் நலன்கருதியும் மகிந்த கூட்டணிக்கு கடிவாளம்போடும் நோக்கிலுமே அவர் பொதுத் தேர்தலில் பிரசார மேடைகளில் ஏறவுள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும் தேசிய அரசு அமைப்பதற்கு சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படாமல் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
0 Comments