பொதுவாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் இந்த உலக கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டவீரர்களுக்கு நிகராக பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு முன்பாக உலக கிண்ணத்தில் பந்து வீச்சாளர்கள் செய்த சில சாதனை விவரங்கள்...
உலக கிண்ணத்தில் இதுவரை 7 ‘ஹாட்ரிக்’ (தொடர்ச்சியாக 3 விக்கெட் வீழ்த்துவது) நிகழ்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் சேத்தன் ஷர்மா (நியூசிலாந்துக்கு எதிராக, 1987),
பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 1999),
இலங்கையின் சமிந்தா வாஸ் (பங்காளதேஷிற்கு எதிராக, 2003),
அவுஸ்திரேலியாவின் பிரெட்லீ (கென்யாவுக்கு எதிராக, 2003),
இங்கையின் மலிங்க (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2007),
மேற்கிந்திய தீவின் கெமர் ரோச் (நெதர்லாந்துக்கு எதிராக, 2011),
இலங்கையின் மலிங்கா (கென்யாவுக்கு எதிராக, 2011) ஆகியோர் ‘ஹாட்ரிக்’ சாதனையாளர்கள் ஆவர்.
* இதில் 2007-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மலிங்க தொடர்ந்து 4 பந்துகளில் விக்கெட்டுகளை சாய்த்தார். உலக கிண்ண மட்டுமின்றி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் இவர் தான்.
* இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாசுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவர் 2003-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் பங்காளதேஷிற்கு எதிராக ஆட்டம் தொடங்கிய முதல் 3 பந்துகளிலும் விக்கெட்டுகளை கபளீகரம் செய்திருந்தார். எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சரி ஆட்டம் தொடங்கிய முதல் 3 பந்துகளில் விக்கெட் எடுத்த ஒரே வீரர் இவர் தான்.
* உலக கிண்ண போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர் அவுஸ்திரேலியாவின் மெக்ராத். அவர் 71 விக்கெட்டுகளுடன் (39 ஆட்டம்) முதலிடத்தில் இருக்கிறார். ஒரு உலக கிண்ணத்தில் அதிக விக்கெட் (2007-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் (26 விக்கெட்), இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சு (2003-ம் ஆண்டு நமிபியாவுக்கு எதிராக 7-15) ஆகிய பெருமையும் மெக்ராத் வசமே இருக்கிறது.
*1983-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்ட்டின் சினெடன் 12 ஓவர்களில் 105 ஓட்டங்களை வாரி வழங்கியதே இந்த நாள் வரை மோசமான பந்து வீச்சாக உள்ளது.


0 Comments