திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.யை பொலிஸார் கைது செய்தமை தொடர்பாக நேற்று பாராளுமன்ற சபைக்கூட்டத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தரப்பினருக்கு இடையே கடும் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டது.
சபாநாயகரின் அனுமதியில்லாமல் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற சட்டங்களை மீறிய செயல் என்று எதிர்க்கட்சியினரும் குற்றம் செய்த சந்தேக நபரொருவரை எம்.பி.யை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என ஆளும் தரப்பினர் வாதிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக சபாநாயகர் ஆராய்ந்து தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டுமென்றும் இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டனர்.
இதனை செவிமடுத்த சபாநாயகர் சமல் ராஜபக்ச இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து சபையில் தீர்ப்பை வழங்குவதாகவும் அறிவித்தார்.
இந்த வாத பிரதிவாதங்களின் போது திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி சபாநாயகரின் அனுமதியில்லாமல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறிய செயலாகும் என தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எம்.பி.யை பொலிஸாரால் கைது செய்ய முடியும் அதற்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை.
பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார கருத்து தெரிவித்த போது குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட எம்.பி. யொருவரை கைது செய்ய முடியாது என எங்கும் கூறப்படவில்லை. திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி பொய்யான அறிக்கையை தயாரித்து கையெழுத்திட்டு வெளியிட்டதினாலேயே கைது செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில் பல தடவை நானும் கைது செய்யப்பட்டேன். ஆனால், அப்போது சபாநாயகரின் அனுமதி பெறப்படவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச உங்களை கைது செய்த போது நல்ல வேளை நான் உள்நாட்டில் இருக்கவில்லை. ஆனால் அத்தருணத்தில் பிரதி சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றார். இதன் போது பேசிய பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க இது விடயம் தொடர்பாக ஆளும் தரப்பினர் எதிர்த்தரப்பினர் மத்தியில் தெளிவற்ற நிலை தோன்றியிருப்பதால் இதனை ஆராய்ந்து சபாநாயகர் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டுமென்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் கடந்த கால பாராளுமன்ற தீர்மானங்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவேன் என்றார்.

0 Comments