நாடு வலிமை அடைவதற்காக தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மகேஷ்வர டவுண் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நர்மதா நதிக்கரையோரம் நேற்று இரவு நடைபெற்ற ”நர்மதா இந்து சங்கம் ”என்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “நாட்டின் நலனுக்காக இந்துக்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் நாடு வலிமையான பாரதமாகும். உலகின் குருவாக இந்தியா முன்பு விளங்கியது. எதிர்காலத்திலும் இந்தியா உலகின் குருவாக அறியப்படும். அமெரிக்காவுக்கு பணபலமும் தொழில் பலமும் உள்ளது. சீனாவுக்கு ராணுவ பலம் உள்ளது. ஆனால் இவை அனைத்தும் உள்ள உலகின் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது” என்று தெரிவித்தார்.
சமூகத்தின் ஒரு பிரிவினர் கோவிலுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்படுவது மற்றும் தண்னீர் எடுக்க விதிக்கப்படும் தடை குறித்து தனது கவலையையும் மோகன் பகவத் வெளிப்படுத்தினார்.


0 Comments