Subscribe Us

தைவான்: சிறை முற்றுகை முடிவுக்கு வந்தது; 6 கைதிகள் தற்கொலை


தைவான் நாட்டுச் சிறை ஒன்றில் அதன் வார்டனையும் பாதுகாவலரையும் பிணைக் கைதியாகப் பிடித்துவைத்திருந்த ஆறு சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கௌஷியுங் நகரில் உள்ள சிறையில் 14 மணி நேரம் நீடித்த இழுபறியின் முடிவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கைதிகள் அனைவரும் கொலை, திருட்டு, போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும் தாங்கள் முறையற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாகவும் கூறி இந்தச் சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

சிறையை காவல்துறையினர் சுற்றிவளைத்த நிலையில், கைதிகளால், பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்தவர்கள் பாதிப்பின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆறு கைதிகளும் முதலில் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளனர். இவர்களைப் பார்க்க இரு காவலர்கள் வந்தபோது, அவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.

சிறையில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு காவலர்களை அழைத்துச் சென்ற கைதிகள் அங்கிருந்து ரைஃபிள்கள், ஆறு கைத்துப்பாக்கிகள், 200 தோட்டாக்களை எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து காவல்துறை சிறையை சுற்றிவளைத்தது. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிடித்துவைக்கப்பட்ட இரண்டு காவலர்களுக்குப் பதிலாக, தலைமைக் காவலரும், சிறையின் வார்டனும் பிணைக் கைதியாகச் சென்றனர்.

தாங்கள் தப்பிச்செல்ல கார் வேண்டும், தங்கள் உறவினர்களை அழைத்துவர வேண்டும், தாங்கள் சரணடைவதைப் பற்றிப் பேச, ஒரு கிரிமினல் குழுவின் தலைவரை அழைத்துவர வேண்டும் என்ற கைதிகளின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்தக் கைதிகள் சிறையை விட்டு வெளியேற முயன்றனர். ஆனால், வெளியிலிருந்து காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதும், அவர்கள் உள்ளே சென்றுவிட்டனர்.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தலைமைக் காவலர் விடுவிக்கப்பட்டார். அதற்கு இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு, சிறையின் வார்டன் விடுவிக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு, 4 கைதிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் மீதமிருந்த இரண்டு கைதிகள் அவர்களது உடலை துப்பாக்கியால் சுட்டபிறகு, தற்கொலை செய்துகொண்டதாகவும் நீதித்துறையின் துணை அமைச்சர் சென் மிங் தாங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எந்த ஒரு வீடியோவையோ பிற சாட்சியங்களையோ காவல்துறை வெளியிடவில்லை. வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

ஒரு மாதத்திற்கு சுமார் நானூறு ரூபாய் என்ற வகையில் 

சிறையில் தாங்கள் பார்க்கும் வேலைக்கு அளிக்கப்படும் சம்பளம் மிகக் குறைவாக இருப்பதாக கைதிகள் கூறிவந்தனர். அதனால், குடும்பத்தினர் இவர்களுக்கான செலவைக் கவனிக்க வேண்டிவந்தது.


தைவான் சிறைச்சாலைகளில் தற்போது கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. புதிய சிறைச்சாலைகளைக் கட்டுவதற்கு அரசும் சமூகமும் விரும்பவில்லை என்பதால், அதற்கென நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

சிறைக் கைதிகள் சிறையின் அடுமனைகளிலும் பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதால், அங்கு பாதுகாப்பு தளர்வான முறையிலேயே இருந்து வந்தது.


Post a Comment

0 Comments