பி. முஹாஜிரீன்
ஒரு கிராமத்தின் வளர்ச்சி அப்பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பாடசாலையில் தங்கியுள்ளது. பாடசாலையின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகவுள்ளது. என அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் தெரிவித்தார்.
ஒலுவிலில் இன்று (20) செவ்வாய்க்கிழமை புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள அல்-மினாரா ஆரம்பப் பாடசாலையின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அல்-மினாரா பாடசாலையின் அதிபர் எஸ்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் தொடர்ந்து உரையாற்றுகையில்
கடந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கிவருகின்ற வேளையில் குறித்த இடத்தில் கடந்த மூன்று வருடங்களாக இலங்கை கடற்படை முகாம் இயங்கி வந்தது. இதனால் இப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர்.
அந்த நிலையில் குறித்த காணியை பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்குமாறு எங்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் விடுக்கப்பட்டது. இதனை மாகாண கல்வி திணைக்களம் நிராகரித்து வந்த வேளையில் நல்லாட்சிக்கான ஆட்சிமாற்றத் திட்டத்திற்கமைய இப்பாடசாலை கட்டடத்தில் இயங்கி வந்த கடற்படை முகாம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது. அந்த வகையில் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு நன்றி கூறுகின்றேன்.
மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் இக்காணியை மீட்டெடுத்து அல் மினாரா என்ற பெயரில் புதிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இழந்து போன கல்வியை மீளப்பெற்று இப்பிரதேசத்தில் புதிய ஆட்சியில் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பாடசாலை சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
சிறந்த சூழலில் அமையப்பெற்றுள்ள இப்பாடசாலை எதிர்காலத்தில் நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.
புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் உதவித்தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர்களான யாஸீர் ஐமன், ஏ.சி. றியாஸ் முகம்மட், பொறியியலாளர் ஐ.எல். ஹைதர் அலி, சிறுவர் நன்னடத்தை அதிகாரி உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.





0 Comments