Subscribe Us

சோதிடத்தை நம்பியதால் சோரம்போனார் மஹிந்த


“ஒரு பொய், அது பொய் என்பதை அந்தப் பொய் உண்மைப்படுத்திவிடும்”. சோதிடம் அல்லது கிரக ராசி பலாபலன்களின் பொய்மையை அச் சோதிடம் உண்மைப்படுத்தியதற்கும், அதை முழுமையாக நம்பியவர்களுக்கு நேரும் கதிக்கும், நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் சாட்சியாக இருக்கின்றது.


சோதிடம் போன்ற மர்மமான சாஸ்திரங்களை முழுமையாக நம்பியதால் முன்னாள் ஜனாபதிபதி மஹிந்தவுக்கு தனது ஜனாதிபதி பதவிக் காலத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் கையிழந்து ‘வீட்டுக்குப் போக’ வேண்டியேற்பட்டது.

1948 முதல் சுதந்திர இலங்கையின் எல்லா தலைவர்களும் ஏதோ ஓர் அளவுக்கு சோதிடத்தின் ‘துணையை’ நாடினார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது மஹிந்த ராஜபக்ஷ அளவுக்கு சோதிடத்திடம் ‘சரணாகதி’ அடைந்தவர் எவருமில்லை எனலாம்.

அவசரமாக ஜனாதிபதி தேர்தலொன்றை அறிவிப்பதற்கான நியாயமான அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளை ஜனாதிபதியோ அல்லது அவருடைய வெற்றிக்காக மேடைகளில் முழந்கியவர்களோ முன்வைக்கவில்லை. அவர்களிடம் யதார்த்தமான காரண காரணிகள் இருக்கவுமில்லை.

மஹிந்த ராஜபக்ஷயின் சோதிடச் சரணாகதி மனோ நிலையை விமர்சித்த ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க, ‘ஜனாதிபதி ராஜபக்ஷ இந் நாட்டின் எதிர்காலம் தொடர்பான தீர்மானங்கள் எடுப்பதை கபட புத்திகொாண்ட முட்டாளிடம் ஒப்படைக்கும் அளவுக்கு உள ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளார்’ என தேர்தல் பிரசார மேடைகளில் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான காலியைச் சேர்ந்த சுமனதாச அபேகுணவர்த்தன(^) என்பவர் ‘ராஜபக்ஷவுக்கு இராஜ யோகம்’ இருப்பதாகவும் அவர் வெற்றிபெறுவது உறுதியென்றும் அரச தொலைக்காட்சி சேவைகளின் மூலம் முழு நாட்டுக்கும் சொன்னதோடு நின்றுவிடாமல் மஹிந்தவின் வெற்றிக்கான எல்லா ‘நல்ல நேரங்களையும்’ குறித்துக்கொடுத்தார்.

ஆனால், இறுதியில் நடந்தவற்றை முழு நாடும் அறியும். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் முன்னர் தனக்கு நேர்ந்த கதியை அறிந்துகொண்ட மஹிந்த, தனது நண்பனான எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கவை அரளி மாளிகைக்கு அழைத்து சொந்த ஊருக்குச் செல்வதற்கு வாகனமொன்றை (ஹெலிகொப்டரை)ப் பிடித்துத் தருமாறு கேட்கும் அளவுக்கு பத்து வருடங்கள் நாட்டை ஆண்ட தலைவர் சோதிடர்களினால் தலைக் கவிழ்க்கப்பட்டிருந்தார்.

இலங்கை நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய தலைவராகவும் அதேநேரம் சோதிடத்தை நம்பியதால் அரசியல் ரீதியாக மிகப் பாதகமான அபாக்கியத்திற்கு உள்ளான தலைவராகவும் மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் எழுதப்படுவார்.

** காட்டூன் விபரம்:
மஹிந்தவின் வெற்றி குறித்து எதிர்வுகூறிய இரண்டு சோதிடர்களிடம், 'மஹிந்த தோல்வியடைந்து உங்கள் சோதிடம் பொய்யானால் என்ன செய்துகொள்வீர்கள்?' என்று ஊடகங்களில் கேட்கப்பட்டபோது, ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாகவும், இன்னொருவர் தீக்குளிப்பதாகவும் கூறியிருந்தனர். இன்றுவரை அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை.
ஆஸ்தான சோதிடர் சுமனதாச (^) நீள நிற சட்டையில்.

மூலம்: ColomboTelegraph
தமிழில்: Hisham Hussain
-TPT-

Post a Comment

0 Comments