Subscribe Us

மும்மத நிகழ்வுகளுடன் " “தன்னிறைவான தாய்நாடும்- அபிமான நாளைய நாளும்” என்ற தொனிப்பொருளின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்


நாட்டின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 08 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டமானது “தன்னிறைவான தாய்நாடும்- அபிமான நாளைய நாளும்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசெப் மைக்கல் பெரேரா  தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த அவர், விழாவின் ஆரம்பநிகழ்வாக கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்திற்கு எதிராக அமைந்துள்ள முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க சிலையுருவத்துக்கு சுபநேரப்படி காலை 07.30 க்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறும் என தெரிவித்தார். 

இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பானது முப்படைகளைச் சார்ந்தவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்.  பாதுகாப்பு அதிகாரிகள், இளைஞர் பிரிகேடியர்கள் உட்பட சுமார் 5,922 பேரை உள்ளடக்கியிருக்கும். கலாசாரங்களை பிரதிபலிக்கும் நிகழ்வில் 600 கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.  சுதந்திர தின நிகழ்வுக்கு இணையாக மும்மத நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

அவ்வகையில் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்துடன் பௌத்த முறைப்படி இலங்கை மகா பிரிவென , மரதான ஆகிய இடங்களில் அன்னதான நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து இந்துசமய, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments