பாகிஸ்தானில் பெஷாவர் இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 16-ம் திகதி கொடூர தாக்குதல்கள் நடத்தி, அப்பாவி குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கொன்று குவித்தது, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, தீவிரவாத இயக்கங்கள் மீது நவாஸ் ஷெரீப் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, ஜமாத் உத் தாவா, ஹக்கானி நெட்வொர்க் உள்பட 12 தீவிரவாத இயக்கங்களை தடை செய்து பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஹர்கத் உல் ஜிஹாத் இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாதின் இயக்கங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments