காணாமல்போன எயார் ஏசியா இந்தோனேசிய விமானமான கியூ. இஸட். 8501 விமானம் கடலின் அடித்தளத்தைச் சென்றடைந்துள்ளதாக தோன்றுவதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலையத்தின் தலைவர் பம்பாங் ஸொயலிஸ்ரியோ தெரிவித்துள்ளார்.
மேற்படி விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் ஒருங்கிணைந்த தகவல்களின் பிரகாரம் அந்த விமானம் கடலின் அடித்தளத்தை சென்றடைந்துள்ளதாக அனுமானிக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவிலிருந்து 155 பயணிகளுடனும் 9 விமான ஊழியர்களுடனும் பயணித்த வேளை காணாமல் போன அந்த எயார் பஸ் ஏ320–-200 விமானத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலை காரணமாக விமானத்தின் பாதையை மாற்ற அந்த விமானத்தின் விமானிகள் கோரியிருந்த போதும், அந்த விமா னம் ராடர் கருவிகளிலிருந்து மறையும் முன்னர் அதிலிருந்து உதவி கோரி அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கிழக்கு ஜாவாவிலுள்ள சுரபயா நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 05.35 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரை சென்றடையவிருந்தது.
எனினும் காலை 6.24 மணிக்கு அந்த விமானத்தின் விமானி, அடர்த்தியான முகில் கூட்டங்களை தவிர்க்க 38,000 அடி உயரத்துக்கு விமானத்தை உயர்த்துவதற்கு அனுமதி கோரியிருந்தார்.
எனினும் விமான பயண நெரிசல்களை கவனத்திற் கொண்டு விமானியின் கோரிக்கைக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவரது கோரிக்கைக்கு பதிலளிக்கும் முன்னர் ராடர் கருவிகளிலிருந்து அந்த விமானம் மறைந்து விட்டதாகவும் இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானம் அபாயகரமான குறைந்த வேகத்தில் பறந்தது?
அந்த விமானம் மோசமான காலநிலை காரணமாக மணிக்கு சுமார் 160 கி.மீற்றர் என்ற குறைந்த வேகத்தில் பயணித்துள்ளதாக விமானத்துறை சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு குறைந்த வேகத்தில் விமானமொன்று பயணிக்கின்றமை அது ஸ்தம்பிதமடைந்து செயலிழப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடியது என விமானத்துறை சார் நிபுணரான ஜியோபிரே தோமஸ் தெரிவித்தார்.
இதையொத்த நிலைமையிலேயே 2009 ஆம் ஆண்டு எயார் பிரான்ஸ் ஏ.எப். 437 விமானம் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு மேலாக விபத்துக்குள்ளாகி காணாமல் போனதாக அவர் கூறினார்.
ராடர் தகவல்களின் பிரகாரம் அந்த விமானம் 36000 அடி உயரத்தில் குறைந்த வேகத்தில் பயணித்துள்ளதாக கூறிய அவர் இது அந்த உயரத்தில் பறப்பதற்கான மிகவும் குறைந்த வேகமாகும் எனத் தெரிவித்தார்.
உயரமான இடத்தில் ஐதான வளியில் மிகவும் குறைந்த வேகத்தில் விமானமொன்று பறக்கும் போது அந்த விமானத்தின் இறக்கைகள் பறப்பதற்கு ஆதரவளிக்காது. இத்தகைய தருணத்தில் விமான இயக்கமே ஸ்தம்பிதமடைய நேரிடும் என தோமஸ் குறிப்பிட்டார்.
கடலில் அவதானிக்கப்பட்ட பொருள் எயார் ஏசியா விமானத்திற்கு உரியது அல்ல
காணாமல் போன எயார் ஏசியா விமானத்தைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய ஒரியன் விமானத்தால் கடலில் அவதானிக்கப்பட்ட பொருள் எயார் ஏசியா விமானத்துடையது அல்ல என இந்தோனேசிய உப ஜனாதிபதி ஜுஸுப் கல்லா தெரிவித்தார்.
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,120 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள நங்கா தீவுக்கு அருகில் எயார் ஏசியா விமானத்துக்குரியது என சந்தேகிக்கப்படும் பொருளொன்று மேற்படி அவுஸ்திரேலிய விமானத்தால் அவதானிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய விமானப்படை கட்டளைத் தளபதிகளில் ஒருவரான டவி புட்ரன்தோ தெரிவித்திருந்தார். எனினும் அந்தப் பொருள் எயார் ஏசியாவுக்குரியது என்பது இன்னும் நிச்சயப்படுத்தப்படவில்லை என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் மோசமான காலநிலைக்கு மத்தியில் அந்தப் பொருள் காணப்பட்ட பிரதேசத்தில் 15 கப்பல்களும் 30 விமானங்களும் தேடுதல்களை மேற்கொண்ட போது காணாமல் போன விமானத்திற்குரிய எந்தவொரு பொருளும் அங்கு காணப்படவில்லை என ஜுஸுப் கல்லா தெரிவித்தார்.
தற்போது மேற்படி தேடுதல் நடவடிக்கையானது ஜாவா கடலிலுள்ள பெலிதுங் தீவுக்கு அருகில் எண்ணெய் படலங்கள் மிதப்பது அவதானிக்கப்பட்ட பிராந்தியத்தை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய விமானப்படையின் பேச்சாளர் ஹாடி தஜஹ்ஜன்டோ கூறினார்.
அந்த எண்ணெய் படலங்கள் எயார் ஏசியா விமானத்துக்குரியதா அல்லது ஏதாவது கப்பலுக்குரியதா என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறிய அவர், மேற்படி எண்ணெய் படலங்கள் அவதானிக்கப்பட்ட பிராந்தியம் கப்பல் போக்குவரத்து பாதையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேற்படி விமானத்தில் 138 வயது வந்தவர்கள், 16 சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 155 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர்.அதேசமயம் அந்த விமானத்தில் சிங்கப்பூர், மலேசியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் தென் கொரியாவைச் சேர்ந்த மூவரும் 155 இந்தோனேசியர்களும் பயணித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments