Subscribe Us

header ads

உள்வீட்டுக் குழப்பம். ஆளுங் கட்சி இரண்டாகப் பிளவுபடும் அபாயம்.

ஜனாதிபதியின் புகழ் மங்கிப் போயுள்ள நிலையில் அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவது ஆபத்தாகலாம் என்பது ஆளுங் கட்சியின் அமைச்சர்கள் பலரின் கருத்தாக உள்ளது. அவசர ஜனாதிபதி தேர்தல் யோசனையை கைவிட்டுவிட்டு ஜனாதிபதி முறையை இரத்து செய்துவிட்டு பாராளுமன்ற ஆட்சி முறைக்கு மாறுவதற்கான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளாத போது அரசாங்கத்திலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அச்சுருத்தும் அறிக்கைகள் வெளிவருவதாக அறிய முடிகின்றது என 'ராவய' சிங்கள செய்திப் பத்திரிகை கூறுகின்றது.
மேலும் அப் பத்திரிகையில், 'ஆளுங் கட்சியில் மாற்றுக் கருத்துள்ள நாற்பது உறுப்பினர்கள் வரை இருப்பதாக அரசாங்கத்தின் உள்வீட்டுச் செய்திகளின் ஊடாக அறியமுடிகின்றது. கட்சி இரண்டாக பிளவுபடுவதை தவிர்க்க முடியாத அளவுக்கு உள்வீட்டுக் குழப்பம் முற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான டிவ் குணசேகர, திச்ச விதாரன, வாசுதேவ நாநாயக்கார ஆகியோருடன் ஜனாதிபதி நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்றை நடத்தி உள்ளார். அச் சந்திப்பின் போது புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி ஜனாதிபதி தேர்தலை வெற்றிபெறுவது இலகுவானது அல்ல என டிவ் குணசேகர சுட்டிக்காட்டி உள்ளார். பாராளுமன்ற தேர்தல் முறைக்கு மாறுமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேன கட்சியில் கலந்தாலோசிக்காமல் அவசர ஜனாதிபதி தேர்தல் நடத்துவதின் மூலம் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்? என்று ஜனாதிபதியிடம் கடித மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை அமைச்சர்களான பசில் ராஜபக்ஷவும் டலஸ் அழகப்பெருமையும் ஜாதிக ஹெல உருமய பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதண தேரரை சந்தித்து கருத்து வேறுபாடுகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு வேண்டியுள்ளனர். அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக உடன்பாடில்லாத விடயங்களுக்குக் கூட தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கியதை நினைவுபடுத்திய தேரர், தாம் முன்வைக்கும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவில்லை என்றால் உறுதியாக அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்வதாக அமைச்சர் பசிலிடம் கூறிவிட்டார்.

Post a Comment

0 Comments