அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சர் றிசாத் பதியூதீன் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கிடையில் தற்போது அரசியல் போர் ஆரம்பமாகியுள்ளது.
இவர்களுக்கிடையில் இடம் பெற்றுவரும் அரசியல் போர் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளது.
நீண்ட நாட்களாக குறித்த இருவருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோன்றி வந்துள்ளது. இந்த நிலையில் மன்னாரில் உள்ள பிரபல முஸ்ஸிம் தேசிய பாடசாலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நிகழ்வொன்று இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு 2 ஆம் நாள் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியூதீனும் சிறப்பு விருநதினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரையும் அழைக்கும் நிகழ்விற்கு காதல் ஜோடியாக செல்லும் இவர்கள் இருவரும் தனித்தனியே சென்றிருந்தனர்.
காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் குறித்த கண்காட்சிக்கு சென்று தேசியக் கொடியை ஏற்றி பின் நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
மாலை 2.30 மணிக்குச் சென்ற அமைச்சர் றிசாத் பதியூதீன் இரண்டாவது தடவையாக குறித்த நிகழ்விற்கு விருந்தினராக சென்று, மீண்டும் தேசியக் கொடியை ஏற்றி பின் நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களினால் முசலி பிரதேசத்தில் “ஹுனைஸ் வெற்றிக் கிண்ணம்” விளையாட்டு விழா ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த விழா இன்று முசலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு சிறப்பு மற்றும் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் துண்டுப்பிரசுரம் சுவரொட்டிகள் விதம் விதமாக ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சர் றிசாத் பதியூதீன் தொடர்பில் எவ்வித அழைப்புக்களும், பதாதைகளும் வெளியிடப்படவில்லை.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் எதிர்வரும் 10-10-2014 அன்று பிரதி அமைச்சர் பதவியை ஏற்கப்போகின்றார் என்பது தொடர்பில் துண்டுப் பிரசுரங்கள் முசலியில் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவங்களை பார்க்கின்ற போது இவர்களுக்கிடையில் போர் மூண்டுள்ளமை தெரிய வருகின்றது.
இன்று முசலியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமையில் விளையாட்டு விழா ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் அமைச்சர் றிசாத் பதியூதீனை பிரதம விருந்தினராக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இவர்கள் இருவருடைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Puttalam today.
0 Comments