“இந்த மைதானம் (கரித்தரவை) சாஹிரா பாடசாலைக்குச் சொந்தமானது. இதன் பணிகள் நிறைவடைந்தவுடன் பாடசாலைக்கு ஒப்படைத்துவிடவேண்டும். எனவே, புத்தளம் கால்பந்தாட்ட அணிகள் பயிற்சி பெறுவதற்காக மைதானமொன்று அமைத்துத் தரப்படும். கால்பந்தாட்ட அணிகளுக்கு திகதிகள் ஒதுக்கப்பட்டு, பயிற்சிக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் இப் பயிற்சி மைதானம் அமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறினார்” என புத்தளம் நகரபிதா கௌரவ கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் சவால் கிண்ண வயது 20 கீழ் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் (FFSL President Challenge Cup – Under 20 football tournament) இறுதிப் போட்டி 2014.08.08 ஆம் திகதி சாஹிரா விளையாட்டு மைதானத்தில் (கரித்தரவை) நடைபெற்றது. வயது 20 கீழ் புத்தளம் லீக் அணியுடன் மோதிய லிவர்பூல் அணி 4 : 1 என்ற கோல் வித்தியாசத்தில் சவால் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
இப் போட்டியின் பிரதம அதிதிகளாக புத்தளம் நகரபிதாவும் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ்சித் ருத்ரிகோவும் கலந்துகொண்டனர். பரிசளிப்பு நிகழ்வின்போது உரையாற்றிய நகரபிதா, “எதிர்வரும் நவம்பர் மாதம் புத்தளம் மாவட்ட தேசிய விளையாட்டரங்கு (நகர சபை மைதானம்) நிருமாணப் பணிகள் முடிவடையும். அதன் திறப்பு விழாவின் போது இலங்கை தேசியக் கால்பந்தாட்ட அணியும் சம்மேளனத்தினால் பெயர் குறிப்பிடப்படும் அணியொன்றும் விளையாடவிருக்கின்றன” என்றும் தெரிவித்தார்.
புத்தளத்தின் கால்பந்தாட்டத் துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி நகரபிதாவுக்கும் இலங்கையின் கால்பந்தாட்டத் துறைக்காக சேவையாற்றிவரும் சம்மேளனத் தலைவருக்கும் நினைவுச் சின்னங்கள் கையளிக்கப்பட்டன. நகரபிதாவுக்கான நினைவுச் சின்னத்தை சம்மேளனத் தலைவர் வழங்கியதோடு, புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனச் செயலாளரும் ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனப் பொருளாளருமாகிய ஜே.எம். ஜவுஸி சம்மேளனத் தலைவருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார். இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற லிவர்பூல் அணிக்கு சவால் கிண்ணமும் பணப் பரிசு ரூபா 15,000/= பிரதம அதிதிகளினால் வழங்கப்பட்டது.
எம்.ஆர்.எம். அம்ஜத் பிரதம நடுவராகவும் எம்.எஸ்.எம். நவ்பி, ஏ.ஓ.எம். அசாம் துணை நடுவர்களாகவும் கடமையாற்றினர். லிவர்பூல் அணிக்கான கோல்களை முறையே எம்.எம். ஷகீல் (10), ஆர்.எம். ரில்வான் (14), எம். தஸ்னீம் (09), எம். ரஸ்வான் (07) ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர். லீக் அணியின் கோலினை ஆர்.எம். ரிஜ்வான் பெற்றுக்கொடுத்தார். நிகழ்ச்சி அறிவிப்பாளராக ஏ.எம். ஹிஷாம் ஹுஸைன் தமிழ் சிங்களம் இருமொழிகளிலும் தொகுத்து வழங்கினார்.
இவ் இறுதிப் போட்டிக்குத் தகைமைப் பெற்ற வெம்பில்டன் அணி கலந்துகொள்ளவில்லை. புத். கால்.சம்மேளனத்தின் குறுகிய நேர அழைப்பை ஏற்று வயது 20 கீழ் லீக் அணி கலந்துகொண்டு, கண்காட்சிப் போட்டியாக நடத்தப்பட்டது.
படங்கள்: A.W.M. Azmath Hisham Hussain Thanks: The puttalam Times
0 Comments