தாய்லாந்தின் தமாசத் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தாய் பகிரங்க மெய்வல்லுவர் போட்டிகளில் இலங்கைக்கு நேற்று பிற்பகல் 3 மணிவரை ஒரு தங்கப் பதக்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்திருந்ததாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் பிரேமா பின்னவெல தெரிவித்தார்.போட்டியின் முதலாம் நாளான செவ்வாயன்று பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை கீதானி ராஜசேகர 4 நிமிடங்கள், 24.41 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
இதே தினம் நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தலில் மஞ்சுள குமார (2.14 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
குறுந்தூர ஓட்ட வீரர் ஷெஹான் அம்பேபிட்டிய, வீராங்கனை ஜானி சத்துரங்கனி ஆகியோர் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் நான்காம் இடங்களையே பெற்றனர்.
இரண்டாம் நாளான நேற்றைய தினம் ஆண்களுக்கான 20 கிலோ மீற்றர் வேகநடைப் போட்டியை ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் 11 செக்கன்களில் நிறைவு செய்த அக்கில சன்னக்க பெர்னாண்டோவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இன்று நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் எம். சலீம்தீனும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் சந்திரிகா சுபாஷினியும் தங்கப் பதக்கங்களை வென்றெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Comments