நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி
பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, புதிய பிரதமராக நரேந்திர
மோடி, இன்று (26ஆம் தேதி) மாலை 6 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக, நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக
இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள், மாநில
முதல்வர்கள், ஆளுநர்கள், பல்வேறு நாட்டு தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்
மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 3000 பேருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மாளிகை முன்பு உள்ள திறந்த வெளியில் நரேந்திர மோடி பதவியேற்பு
விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று மாலை சுமார் 5
மணியிலிருந்தே பதவியேற்பு விழா நடக்கும் இடத்திற்கு தலைவர் வரத்
தொடங்கினர்.
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், அமீத்ஷா, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ்,
வெங்கையா நாயுடு, லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தெலுங்கு தேசம்
தலைவர் சந்தி£ரபாபு நாயுடு ஆகியோர் சுமார் 5 மணியளவில் விழா நடக்கும்
இடத்திற்கு வந்தனர். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்,
பிரதிபா பாட்டீல், மீராகுமார் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
சார்க் நாடுகளின் தலைவர்கள்
சார்க் நாடுகளின் தலைவர்களான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் செரீப், ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர்
சுஷில் கொய்ராலா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹாய், மொரீஷியஸ் நாட்டு
அதிபர் நவீன் ராம்கூலம், மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், வங்கதேச அரசு
சார்பில் அந்நாட்டு சபாநாயகர் ஷெரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோர் கலந்து
கொண்டனர்.
சோனியா, ராகுல் பங்கேற்பு
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தியும், ராகுல் காந்தியும் மாலை 5.35 மணிக்கு வந்தனர். மன்மோகன்சிங்
5.40 மணிக்கு வந்தார். நாட்டிலுள்ள மாநில ஆளுநர்கள், வெளிநாட்டு தூதர்கள்
கலந்து கொண்டனர்.
திரையுலக பிரபலங்கள்
மேலும், திரையுலக பிரபலகங்களான தர்மேந்திரா, சல்மான்கான், ஹேமமாலினி, ஜெயப்பிரதா ஆகியோரும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
மோடி வருகை
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி சுமார்.5.58 மணிக்கு விழா
நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். அப்போது அனைத்து தலைவர்களுக்கு எழுந்து
நின்று நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
துணை ஜனாதிபதி அமீர் அன்சாரி வருகை தந்தார். இதையடுத்த, சுமார் 6.08
மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழா மேடைக்கு வந்தார். அவருக்கு
அனைத்து தலைவர்களும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர். இதையடுதத தேசிய
கீதம் முழங்கியது.
மோடி பதவியேற்பு
அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்
கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும், ரகசிய
காப்பும் செய்து வைத்தார்.


0 Comments