மணம் முடித்து தம்பதிகள் தமக்கென ஒரு
குழந்தையை பெற்றெடுக்க திட்டமிடுவது வழக்கம். ஆனால் எதிர்பாராத
விதமாக குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல் பலரது வாழ்க்கையில் ஒரு
தடையாக மாறியுள்ளது. இதற்கு காரணம் கணவனா? மனைவியா? என்ற விவாதம்
குடும்பங்களுக்குள் திரை மறைவில் ஆரம்பிக்கும். மருத்துவ
பரிசோதனைகள் தம்பதிகளுக்கு செய்யும் போதே இதற்கான விடை
கிடைக்கின்றது. எனினும் சம்பிரதாய முறையில் பல குடும்ப உறவினர்கள்
பெண்களுக்குத் தான் இதற்கு காரணமான குறைகள் இருக்க வேண்டும் என ஒரு
தவறான கருத்து இருந்து வருகின்றனர். ஆனால், அண்மைக்காலமாக நாம்
செய்து வரும் பரிசோதனைகளில் இருந்து பலரது வாழ்க்கையில்
தாமதமடையும் குழந்தைப் பாக்கியத்துக்கு காரணமாக ஆண்களது
பங்களிப்புத்தான் இருந்து வருகின்றது. இந்த செய்தி
தம்பதிகளுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் அதிர்ச்சியான ஒரு
செய்தியாக கூட இருக்க முடியும்.
குழந்தைப் பாக்கியத்துக்கு ஆண்களது குறைகள் என்றால் என்ன?
கரு ஒன்று உருவாகுவதற்கு பெண்களிடம் இருந்து சூல்முட்டைகள் வர
வேண்டியது போல் ஆண்களிடம் இருந்து விந்துக்கள் தேவைப்படும். இந்த
விந்துக்களின் பற்றாக்குறையே ஆண்களின் குறைபாடாக
விளங்குகின்றது. விந்துக்களின் தராதரமானது விந்துக்களின்
எண்ணிக்கை, விந்துக்களின் துல்லியமான அசைவு மற்றும் விந்துக்களின்
ஒழுங்கான கட்டமைப்பு என பல காரணிகளில் தங்குகின்றது. இவற்றில்
ஏதாவது ஒன்று குறையாக இருந்தாலே கருக்கட்டல் கேள்விக்குறியாக
மாறுகின்றது. எனவே, விந்துக்களின் தராதரமானது ஆண்களின்
விந்துக்களை பரிசோதித்து பார்க்கும் போது கண்டறியப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் ஆண்களுக்கு விந்து பரிசோதனையை செய்து
வருமாறு கூறியதும் சிலர் இப்பிரச்சினையை காலதாமதமாக்குவதும்
பின்வாங்குவதும் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு இந்த முக்கிய
பரிசோதனையை தாமதப்படுத்துவது உங்களது குழந்தைப் பாக்கியத்தை
மேலும் தாமதப்படுத்துவது போல் தான் இருக்கும். எனவே ஆண்கள் இவ்வாறு
விந்து பரிசோதனையை காலதாமதமின்றி செய்வதன் மூலமே சிகிச்சையை நாம்
சரியாக ஆரம்பிக்கலாம்.
ஆண்களின் விந்துக்களின் தராதரக் குறைவு ஏற்படக் காரணம் என்ன?
ஆண்களது விந்துக்கள் குறைவாக இருக்கும் போது பலரும் கேட்கும் கேள்வி
இதற்கு என்ன காரணம் என்று தான். ஆனால் சரியான காரணம் எதுவென எவருக்கும்
தெரியாமல் தான் இருக்க முடியும். அதாவது குறிப்பிட்டு
சொல்லக்கூடியவாறு காரணம் எதுவும் இல்லை என்பது ஆகும். சிலரில்
புகைப்பிடிக்கும் பழக்கம், மதுபானம் அருந்துதல், கட்டுப்பாடில்லாத
நீரிழிவு நோய், வயதுவந்தவர்களில் ஏற்பட்ட கூகைக்கட்டு நோய் என்பன
காரணமாக அமைய முடியும். எனவே, இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தி
உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.
சிலரில் விதைகள் நார்த்தன்மையாக
எந்தவித விந்து உற்பத்தியும் இல்லாது காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான நார்த்தன்மையான விதைகள் அவர்களது பிறப்பு குறைபாடாகவே
கருத வேண்டியுள்ளது.
விந்துக்கள் குறைவாக இருக்கும் போது குழந்தை பாக்கியத்தை எவ்வாறு வென்றெடுக்க முடியும்?
விந்துக்கள் குறைவானவர்களில் இதனை உறுதிப்படுத்த பரிசோதனையை
ஆகக் குறைந்தது இரு தடவைகளாவது செய்ய வேண்டும். இவ்வாறு விந்துக்
குறைவு உறுதியானதும் அடுத்த கேள்வி இதனை எவ்வாறு கூட்டி எண்ணிக்கையை
உயர்த்தலாம் என்பதே ஆகும். மருந்துகள் உள்ளனவா? ஊசிகள் உள்ளனவா? என
பலரும் கேட்கும் கேள்விதான் இதுவாகும். இதற்கு பல மருந்துகள், ஊசிகள்
இருக்க முடியும். ஆனால் எந்த அளவு இவை வெற்றி தரும் என்பது
கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மருந்துகள் மூலம் பெரிதளவு
முன்னேற்றம் விந்துக்களின் தராதரத்தில் ஏற்படும் என நாம்
நம்பியிருக்க முடியாது. விஞ்ஞானத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியை
பாவித்து என்ன தீர்வு கொடுக்கலாம் என சிந்திக்கத்தான் வேண்டும்.
விந்துக்களின் எண்ணிக்கையை உயர்த்த விதைகளில் பல சத்திர சிகிச்சைகள்
செய்ய வேண்டும் எனக் கூறுவது இந்தியாவில் ஒரு சில
மருத்துவமனைகளில் இருக்கும் வைத்தியர்கள் சொல்லும் மந்திரமாக
இருந்து வருகின்றது. இந்தியா செல்லும் எமது மக்கள் அங்குள்ள பெண்
வைத்திய நிபுணரை சந்திக்கவே செல்கின்றனர். அவ்வாறான
சந்தர்ப்பத்தில் அந்த பெண் வைத்திய நிபுணரின் கணவரும் ஒரு
சத்திரசிகிச்சை நிபுணர். இங்கிருந்து செல்லும் பெண்களின் கணவன்மார்களை
பிடித்து இந்தியாவில் பெண் வைத்திய நிபுணரின் கணவர் பல சத்திர சிகிச்சைகளை
ஆண்களில் செய்வது வழமையான விடயமாக இருக்கின்றது. ஆனால் அவ்வாறான சத்திர
சிகிச்சையில் பலன் யாருக்கு கிடைத்தது என்றால் எதுவுமில்லை. விந்துக்கள்
எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் நிரந்தரமாக வந்து விடும் என்று சொல்லியே
இவ்வாறான சத்திரசிகிச்சைகள் செய்யப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் பலன்
எதுவும் வரவில்லை.
கு.சுஜாகரன்,
மகப்பேற்று பெண் நோயியல்
சத்திர சிகிச்சை நிபுணர்.


0 Comments