Subscribe Us

header ads

இந்தியாவை வென்று தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து


நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் நியூஸிலாந்து அணிக்குமிடையிலான 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 4ஆவது போட்டியில் இன்றையதினம் வெற்றி பெற்றே அவ்வணி இத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஹமில்ற்றனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றது.

05 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டையும் 22 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டையும் இழந்த அவ்வணி, மூன்றாவது விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களையும் 06ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 127 ஓட்டங்களையும் பகிர்ந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக மகேந்திரசிங் டோணி 73 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களையும், றோகித் சர்மா 94 பந்துகளில் 79 ஓட்டங்களையும் இரவீந்திர ஜடேஜா 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் அம்பத்தி ராயுடு 58 பந்துகளில் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பாக ரிம் சௌதி 02 விக்கெட்டுக்களையும் கைல் மில்ஸ், ஹேமிஷ் பெனட், கேன் வில்லியம்சன் மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

279 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 48.1 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 7.2 ஓவர்களில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அடுத்த விக்கெட்டை 58 ஓட்டங்களுக்கே இழந்தது. ஆனால், 3ஆவது விக்கெட்டுக்காக 130 ஓட்டங்களும் 4ஆவது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 92 ஓட்டங்களும் பகிரப்பட்டன.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பாக றொஸ் ரெய்லர் 127 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 82 பந்துகளில் 60 ஓட்டங்களையும் பிரென்டன் மக்கலம் 36 பந்துகளில் 49 ஓட்டங்களையும் மார்ட்டின் கப்ரில் 27 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக மொஹமட் ஷமி, வருண் ஆரொன் இருவரும் தரலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக றொஸ் ரெய்லர் தெரிவானார்.

05 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 3ஆவது போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், 04 போட்டிகளின் நிறைவில் நியூஸிலாந்து அணி 3 - 0 என்ற கணக்கில் இத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Post a Comment

0 Comments