Subscribe Us

இளம் பெண்களே கவணம்! காதல் சண்டையில் காதலியை எலும்புக்கூடாக்கிய காதலர்கள்...கதறும் தகப்பன்

(RR)

திருச்சி அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கல்லூரி மாணவி தற்போது எலும்பு துண்டுகளாக கிடைத்துள்ளார். காதல் தகராறில் அவரை கொன்று புதைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கல்லூரி மாணவி

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் ஆமூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சப்பானி. கல்பட்டறை தொழிலாளி. இவரது மகள் ரஞ்சிதா (வயது 19). இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

ரஞ்சிதா தனது வீட்டில் இருந்து சைக்கிளில் மெயின் ரோட்டுக்கு வந்து அங்குள்ள சைக்கிள் நிறுத்தத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு தினமும் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் ரஞ்சிதா கடந்த 23.2.2012 அன்று காலை சைக்கிள் நிறுத்தத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது ஒருவருடன் ரஞ்சிதா செல்போனில் பேசி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கல்லூரி பேருந்து வந்து நின்ற போது பேருந்தில் ஏறாமல் கல்லூரிக்கு வரவில்லை என்று பேருந்திலிருந்த மாணவிகளிடம் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அதன் பின்பு ரஞ்சிதா வீட்டுக்கும் செல்லவில்லை, கல்லூரிக்கும் போகவில்லை. சைக்கிள் நிறுத்தத்திலேயே அவருடைய சைக்கிள் நின்றது. மகளை காணாததால் கல்லூரி மாணவிகள், உறவினர்கள், தோழிகள் வீடுகளுக்கு சென்று அவருடைய பெற்றோர் தேடி பார்த்தும் ரஞ்சிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

சைக்கிள் நிறுத்தம் அருகே காவிரி ஆற்றுக்கு செல்லும் புதர் பாதை வழியாக ரஞ்சிதா நடந்து சென்றதை சிலர் பார்த்துள்ளனர். அதனால் ரஞ்சிதாவின் பெற்றோர் ஆற்றுப்பகுதிக்கு சென்று அவரை தேடி பார்த்தனர். அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் வாத்தலை பொலிஸில் புகார் செய்தனர். பொலிசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சிதாவை தேடி வந்துள்ளனர்.

ரஞ்சிதா குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவை (ஹேபியஸ் கார்பஸ்) சப்பானி தாக்கல் செய்தார். அதன் பேரில் உயர்நீதி மன்றம் விசாரித்து ரஞ்சிதாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டது.
ஆனால் இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சப்பானி மனு தாக்கல் செய்துள்ளார். அது விசாரணையில் உள்ளது.

எலும்பு துண்டுகள்

தனது மகளை கண்டுபிடித்து தருமாறு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாலும் காவிரி ஆற்றுக்கு ரஞ்சிதா சென்ற பாதை வழியாக சப்பானி சென்று அவ்வப்போது தேடி பார்த்து வந்தார். சப்பானி நேற்று முன்தினம் காவிரி ஆற்று கரைக்கு சென்று புதர் மண்டி கிடந்து அழிக்கப்பட்ட இடத்துக்கு சென்று ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்துள்ளார்.

அப்போது ஒரு இடத்தில் ஒரு எலும்பு துண்டு வெளியில் நீட்டி கொண்டிருந்ததை கண்டார். மேலும் அந்த இடத்தில் மண்ணில் புதைந்த நிலையில் ஒரு செருப்பு, ஆரஞ்சு நிற கிழிந்த துணி வெளியில் தெரிந்தது.

அது தனது மகளின் செருப்பு, அவர் அணிந்திருந்த ஆரஞ்சு நிற சுடிதார் என்று சந்தேகம் அடைந்த சப்பானி அந்த இடத்தை சிறிது தோண்டி பார்த்தபோது மேலும் சில எலும்புகள் கிடந்தன. உடனே இது குறித்து வாத்தலை பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டது அம்பலம்

இதையடுத்து ஜீயபுரம் துணை பொலிஸ் சூப்பிரண்டு கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், ரவிசக்கரவர்த்தி, நடேசன், வாத்தலை சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் எலும்பு துண்டுகள் கிடந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உமா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

முசிறி தாசில்தார் மலர்கொடி முன்னிலையில் எலும்பு துண்டுகள் கிடந்த இடத்தை தோண்டி பார்த்தபோது மண்டை ஓடு, கை, கால் எலும்பு கூடு, எலும்புகள் துண்டு துண்டாக கிடந்தன. சுடிதார், உள்ளாடை மக்கிய நிலையில் கிடந்தன. அவை ரஞ்சிதா காணாமல் போன அன்று அணிந்தவை என்று ரஞ்சிதாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

மேலும் ரஞ்சிதாவின் கைப்பை, டிபன் பாக்ஸ், கல்லூரி அடையாள அட்டை, கை கடிகாரம், வளையல்கள், 3 சிம் கார்டுகள், சைக்கிள் சாவி ஆகியவை அந்த குழிக்குள் கிடந்தன. அவைகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். ரஞ்சிதா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது உறுதியானது. ரஞ்சிதாவை கொலை செய்தவர்களை பிடிக்க தனி பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

செல்போன் பேச்சு

ரஞ்சிதாவின் அண்ணன் அறிவழகனுடன் அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபர் கொத்தனார் வேலைக்கு செல்வார். அப்போது ரஞ்சிதாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக வளர்ந்தது. இது சப்பானிக்கு தெரியவந்ததால் அந்த வாலிபரை கண்டித்துள்ளார்.

அதன் பின்பு அந்த வாலிபரும், ரஞ்சிதாவும் செல்போனில் பேசி வந்துள்ளனர். ரஞ்சிதாவுக்கு, சப்பானி செல்போன் வாங்கி தராமல் இருந்தாலும் தனியாக சிம் கார்டுகள் வாங்கி இரவல் போனை பயன்படுத்தி பேசி வந்துள்ளார்.

மேலும் அந்த வாலிபரின் நண்பரும் ரஞ்சிதாவுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சிதாவை அடைவதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் ரஞ்சிதா கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் புதைக்கப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ரஞ்சிதாவுடன் பழகிய 2 வாலிபர்களையும் பொலிசார் தேட தொடங்கியுள்ளனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments