வவுனியா, இலுப்பையடிப்பகுதியில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் வாங்க முற்பட்டதாகக் கூறி தாய் மகன் மற்றும் மக்கள் வீதியினை மறித்துப் போராட்டம் ஒன்றினை நேற்றிரவு 7.30 மணியளவில் மேற்கொண்டனர்.
வவனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் ஆட்டோ ஒன்றில் பயணித்த தாயும் மகனும் இலுப்பையடியில் கடை ஒன்றுக்குச் செல்ல ஆட்டோவை நிறுத்த முற்பட்டவேளை எதிரே நின்ற போக்குவரத்து பொலிஸார் அவர்களை சமிக்ஞை செய்து அழைத்துள்ளனர்.
இதனால் ஆட்டோவை நாவலர் சிலை சந்தியில் நிறுத்திவிட்டு பொலிஸாரிடம் தமது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனத்தின் ஆவணங்களையும் காட்டியுள்ளனர். அப்போது வீதியில் கரைக்கு அழைத்த போக்குவரத்து பொலிஸார் ஒருவர் நீங்கள் தவறாக ஆட்டோவை திருப்பியதாகவும் நிறுத்தியதாகவும் கூறி லஞ்சம் கோரியுள்ளதாக மேற்படி இருவரும் தெரிவித்தனர்.
அதன் போது எம்மிடம் பணம் இல்லை. 'நாங்கள் சரியாகத் தான் வந்தோம் ஏன் லஞ்சம் தரவேண்டும'என அவர்கள் கூற பொலிஸாருக்கும் ஆட்டோவில் வந்த தாயும் மகனுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆட்டோவை தவறாக திருப்பியதாகவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தம்மிடமிருந்து பறித்ததாகவும் கூறி போக்குவரத்துப் பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுவிட்டு நீதிமன்றுக்கு எழுதி அதற்குரிய பற்றுச் சீட்டினை வழங்கினார்.
இதனையடுத்து தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள வழங்கக் கோரியும் லஞ்சம் கேட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாயும் மகனும் நடு வீதியில் இருந்து போராடினர். அப்போது ஒன்று திரண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வீதியில் நின்று குரல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திரஜித் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கி விட்டு அவர்களை வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்ய வருமாறு பணித்தார்.
0 Comments