அமெரிக்காவின் லாஸ் வெகாஸைச் சேர்ந்த சாரதி ஒருவர் பயணி ஒருவர் தனது டெக்ஸியில் விட்டுச்சென்ற 300 ஆயிரம் அமெரிக்க டொலர் (சுமார் 4 கோடி ரூபா) பணத்தினை உரிமையாளரிடம் திருப்பிச் சேர்த்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.ஜெரார்டோ கம்போ என்ற நபரே பணத்தைத் திருப்பிக்கொடுத்த சாரதியாவார். கடந்த திங்கட் கிழமை அதிகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்த அந்நாட்டு ஊடகங்கள் பல ஜெரார்டோவை பராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தில் காலையில் பயணி ஒருவர் ஜெரார்டோவின் டெக்ஸியில் பயணித்துள்ளார்.
இதன்போது குறித்த பயணி அவர் கொண்டு வந்த பணப் பையினை டெக்ஸியிலேயே விட்டுச்சென்றுள்ளார். இதனையடுத்து பின் இருக்கையில் பயணி விட்டுச்சென்ற தாள் பையினை கண்டெடுத்துள்ளார் ஜெரார்டோ.
சொக்லேட் பை என நினைத்து திறந்து பார்த்த போது 6 கட்டு 100 டொலர் அமெரிக்க நோட்டுகள் இருந்துள்ளன. அதிர்ச்சயடைந்த ஜெரார்டோ, உடனடியாக டெக்ஸி நிறுவனத்திடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் பணத்தினை திருப்பிக்கொடுக்க வழி செய்துள்ளார்.
'ஜெரார்டோவினால் இதுவரையில் 13 வருடங்களாக நாங்கள் ஒரு பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை' என டெக்ஸி நிறுவனம் அவரைப் புகழ்ந்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஜெரார்டோ கூறுகையில், 'எனக்கும் எனது குடும்பத்துக்கும்
நிறுவனத்துக்கும் லாஸ் வெகாஸ் நகரும் சரியானதையே செய்துள்ளேன். ஒரு செக்கன் கூட பணத்தை நான் வைத்துக்கொள்ள நினைக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
பணத்தை விட்டுச்சென்ற பயணி பிரபல்யமான ஒரு போக்கர் விளையாட்டு வீரர் எனக் கூறப்படுகின்றது. அவரது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.
இதேவேளை ஜெரார்டோவை பாராட்டி அவரது நிறுவனம் 1000 அமெரிக்க டொலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது. ஆனால் போக்கர் வீரர் ஜெரார்டோவுக்கு பரிசுகள் ஏதும் வழங்கினாரா என்பது தொடர்பில் தகவல் தெரியவில்லை.

0 Comments