Subscribe Us

பிரித்தானிய பிரதமருக்கு முன்னிலையில் இலங்கைப் பொலிஸாரின் அடாவடி... பெண்கள் குழந்தைகள் என்று பாராது தாக்குதல் உச்சக்கட்டம். (படங்கள், வீடியோ)

சிறிலங்கா சென்றுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று பிற்பகல் சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானத்தில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் சனல் 4 உள்ளிட்ட 30 வரையிலான பிரித்தானிய செய்தியாளர்கள், பலாலிக்குச் சென்றனர்.
அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் சென்ற பிரித்தானியப் பிரதமர், யாழ்.பொது நூலகத்தில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதேவேளை, நீண்டதொரு இடைவெளியின் பின்னர் காணாமல் போனோரது உறவுகள் முன்னெடுத்த போராட்டம் யாழ் நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரித்தானிய பிரதமரை சந்திக்காத வகையில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

யாழ் பொது நூலகம் முன்பதாக பொலிஸ் வாகனங்களை நிறுத்தி அவர்களை வழிமறித்து வைத்திருந்தது.

மறுபுறத்தே அரச ஆதரவு படைத்தரப்பின் ஏற்பாட்டில் 50 பேரைக்கொண்ட கும்பலொன்று சனல்-4 இற்கு எதிராகவும் அரசிற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது.

தமக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இத்தகைய ஏற்பாடுகள் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்த கட்டுப்பாட்டினை தகர்த்து மக்கள் பொலிஸாரை மீறி நுழைவாயிலினை நோக்கி செல்ல முற்பட்டனர்.

இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மதகுருமார் என பாகுபாடேதுமின்றி பொலிஸார் தாக்குதல் நடத்தியமையால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது.

Post a Comment

0 Comments