கரு ஜயசூரியவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை அமைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதன்படி ரணில் விக்கிரமசிங்கவுக்குண்டான அதிகாரங்கள் அனைத்தும் தலைமைத்துவ சபைக்கு உரியாக மாற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை அமைக்கப்பதற்கு அக் கட்சியின் செயற்குழு அனுமதியளித்துள்ளது.
இன்று (04) மாலை கூடிய கட்சியின் செயற்குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த தலைமைத்துவ சபையில் பாரராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, தலதா அத்துகோறளை, ருவான் விஜயவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தேசிய தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இணக்கம் எட்டப்படாத யோசனைகள் கட்சியின் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி ஐக்கிய பிக்குகள் முன்னணி சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரியவிடம் எட்டு யோசனைகளை முன்வைத்தது.
ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஸ்ட தலைவராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தலைவராகவும் செயற்பட வேண்டும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி முதலாவது யோசனையாக குறிப்பிட்டுள்ளது.
கட்சியை இயக்கிச் செல்ல தலைமை சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அது கட்சியை இயக்கிச் செல்லும் பூரண அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் இரண்டாவது யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments