கோடி ரூபாய் பணம்..?
ஒரு பெரிய பங்களா..?
கோடீஸ்வர வீட்டு சம்பந்தம்..?
லட்ச லட்சமாய் பணம் புரளும் வியாபாரம்..?
இவை மட்டும் கிடைத்து விட்டால் உங்களுக்குப் போதுமா..? நீங்கள் காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக இருந்து விடுவீர்களா..?
அவரவர் ஆசைகளை ஒட்டி உங்களுடைய இந்தத் தேவைகள் மாறலாம்.
அமெரிக்க வேலை, ஆங்கிலம் பேசுகின்ற தொடர்புகள் இப்படி வெவ்வேறு மாதிரியாய் இவை இருக்கலாம்..
ஆனால் இவை கிடைத்திருக்கிற எல்லோரும் சந்தோஷமாக இல்லையே… “என்ன வாழ்க்கையடா இது” என்று அவர்களும் அலுத்துக் கொள்ளத்தானே செய்கிறார்கள்.
பணக்காரன் ஏழையை பார்த்து இவன் என்னைவிட நிம்மதியாக இருக்கிறான் என்று நினைத்து பெருமூச்சு விடுகிறான். ஏழை பணக்காரனை பார்த்து அவர்கள் எந்தக் கவலையும் இன்றி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறான்.
மத்திய தர வர்க்கத்தினர் நிலையோ இன்னும் மோசம். அவர்கள் பார்வையில் ஏழை, பணக்காரன் இந்த இரண்டு வர்க்கமுமே சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. கஷ்டப்படுவது தாங்கள் மட்டும் தான் என்பது அவர்களின் அபிப்பிராயம். சரி விஷயத்திற்கு வருவோம். என்ன கிடைத்தால் உங்களுக்கெல்லாம் சந்தோசம் கிடைக்கும்? கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்.
யாரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ…. அவர்களிடம் இருப்பெதெல்லாம் உங்களுக்கு கிடைத்தால் நாமும் அவர்களைப்போல் சந்தோஷமாய் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள். நான் சொல்வது சரி தானே! இப்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. எது உங்களிடம் இல்லையோ அதில் தான் உங்கள் சந்தோஷம் இருக்கிறது என்று நீங்கள் முடிவுக்கு வந்து விடுகிறீர்கள்.
அப்படியானால் உங்களது சந்தோஷத்தையும் சரி, துக்கத்தையும் சரி, நீங்கள் தீர்மானிப்பதில்லை… வேறு யாரோ தான் அதை தீர்மானித்துக் கொண்டு இருக்கிறார்கள். உங்கள் வாழ்கையின் இரண்டு முக்கியமான உணர்வுகளையும் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு அப்படி என்னதான் வாழ்கிறீர்களோ தெரியவில்லை.
சந்தோஷம் எதில் தான் இருக்கிறது?
ரொம்ப சுலபம். சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில் தான் அது இருக்கிறது.
எந்த விஷயத்திலும் ஒரு பிரச்சினையை பார்க்கத் தெரிந்த உங்களுக்கு, அதில் நிறைந்திருக்கும் சந்தோஷத்தை மட்டும் பார்க்க முடிவதில்லையே அது ஏன்? காரணம் அது உங்களிடம் உள்ள ஒரு பழக்கமாக இருக்கிறது.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் நினைப்பது ஒன்றும் பேராசை இல்லை. அடுத்தவரின் நிம்மதியை கெடுத்து ஆனந்தம் அடைய வேண்டும் என்று அவர் நினைத்தால் தான் தவறு.
கவலைப்படுவதற்கான காரணிகளைத் தேடித்தேடி கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோஷத்திற்கான வெளியை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்த பிறகு யாரால் அதைத் தடுக்க முடியும்.
உங்கள் மனது உங்களுக்குள் தானே இருக்கிறது.
உங்கள் சந்தோஷம் அடுத்தவர்கள் வசம் இருக்கும்போது தான் அது சாத்தியமில்லை. பல நேரங்களில் நம் மகிழ்ச்சி அடுத்தவரிடம் தானே இருக்கிறது. எதிர் வீட்டுக்காரன் வீழ்ந்தால் மகிழ்ச்சி. நாம் வாழ்ந்தால் வரும் மகிழ்ச்சியை விட அவன் வீழ்ந்தால் நாம் அடையும் மகிழ்ச்சி தானே நம்மிடம் அதிகமாக இருக்கிறது.
சந்தோஷத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக் கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை. வானம், நட்சதிரம், குழந்தைகள், கும்மிருட்டு, கடல், முதியோர்கள் இப்படி இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் எல்லாமே அவனைப் பொறுத்தவரையில் சந்தொஷத்துக்குரியவைதான். இப்படி நினைப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்று என்னுடன் சண்டைக்கு வராமல், உங்கள் மனதுடன் மல்லுக்கு நில்லாமல் சிறிது யோசித்துப் பாருங்கள்.
எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது இரண்டு சக்கர வாகனத்தை யார் கேட்டாலும் கொடுத்து விடுவார். இரவு 10 மணிக்கு மேல், தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, 4 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் தன் வீடு வரை நடந்தே போவார். ஏன் உனது வண்டியை கொடுத்துவிட்டு இப்படி கஷ்டப்பட்டு நடந்து போகணும் என்று கேட்டால், இதை யார் கஷ்டம்னு சொன்னார்? என்று சிரிப்பார்.
நீங்கள் கடைசியாக காலார நடந்து போனது எப்போது என்று எங்களை பார்த்து கேட்பார். இரவில் அந்த அமைதியான சூழலில், ஒய்யாரமாக நடந்து போகிற சுகமே தனி. அந்த அறிய வாய்ப்பை எனக்கு வழங்கியது எனது வண்டியை வாங்கிக் கொண்டு போன அந்த நண்பர்தான் என்பார்.
உங்களால் இந்த அளவுக்கு முடியாவிட்டாலும், எல்லாவற்றுக்குள்ளும், கவனித்துப் பார்த்தல் சந்தோசம் இருப்பதை நீங்களும் கண்டு கொள்ளலாம்.
சந்தோசம் உங்களுக்குள் இல்லாமல் போவதால் அதை நீங்கள் எங்கெல்லாமோ தேடிக் கொண்டு திரிவதால்தான் யார் யாரெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை தீர்மானிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் எளிதில் உங்கள் மகிழ்ச்சியை கெடுத்துவிடுகிறார்கள்.
பத்திரிகையில் வந்த ஒரு செய்தி.. உங்கள் அவசரம் புரியாமல் தொலைபேசியில் உங்களை வெறுப்பேற்றிய உங்கள் நண்பர்கள்.. தேடியும் கிடைக்காத உங்கள் சப்பாத்து… இப்படி எத்தனையோ விஷயங்கள் உங்கள் சந்தோஷத்தை மிகவும் சுலபமாக தட்டிப் பறித்து விடுகின்றன.
இவைகளுக்கு உங்கள் சந்தோஷத்தைக் கெடுக்கும் வல்லமை இருக்கும் என்றால் உங்களின் சந்தோஷ உணர்வு எவ்வளவு பலகீனமானதாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.
உலகில் மிகச்சிறந்த கணிதமேதை ஐன்ஸ்டின்.. பேரூந்தில் ஒருநாள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கண்டக்டர் தன்னிடம் கொடுத்த மீதிச் சில்லரையை எண்ணிப் பார்த்துவிட்டு சில்லறை குறைவாக இருக்கிறது என்றாராம். உடனே கண்டக்டர்.. “உங்களுக்கு எண்ணத் தெரியாது என்று நினைக்கிறேன், ஒழுங்காக எண்ணுங்கள்” என்றாராம்.
யாரைப் பார்த்து எண்ணத் தெரியாது
என்கிறாய், நான் உலகின் மிகச் சிறந்த கணித மேதை தெரியுமா? என்று அவரிடம்
ஐன்ஸ்டின் சண்டைக்குப் போகவில்லை. மனசுக்குள் சிரித்துக் கொண்டே மறுபடியும்
அதை எண்ணினாராம்.
அந்த கண்டக்டர் அப்படிச் சொன்ன சமயத்தில்
எனக்கு அடக்கமுடியாத சிரிப்பு தான் வந்தது என்று அந்த சம்பவத்தை பற்றி
அடிக்கடி தன் நண்பர்களிடம் மிகவும் சிலாகித்துச் சொல்வாராம் ஐன்ஸ்டின்.
ஐன்ஸ்டின் இருந்த இடத்தில் நாம் இருந்திருந்தால், நான் உயர்தரத்தில்
கணக்கில் எத்தனை மார்க் தெரியுமா என்று ஆரம்பித்து ஏதேதோ பேசியிருப்போம்.
உங்கள் அறிவாளித்தனத்தை நிரூபிக்க அவருடன் மல்லுக்கு நிற்பதைவிட உங்கள்
சந்தோஷம் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லையா?ஏன் இப்படித் தேடித் தேடி கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் சக்தியை செலவிடுகிறீர்கள். காரணம் உங்கள் சந்தோஷத்தை நீங்கள் நீங்கள் தீர்மானிப்பதில்லை.. அது தான் நிதர்சனமான உண்மை.
ஒரு நாள் இப்படி செய்துப் பாருங்களேன். நான் இன்று முழுவதும் சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்களேன்.
நான் அப்படி சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் அதற்கு என்னிடம் நிறையப் பணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
சந்தோஷ எண்ணத்தோடு சந்தோஷமாக இருக்கும் உளவியல் பயிற்சி இது. அதற்கு உங்களிடம் பணம் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
அப்படி முடிவெடுக்கிற நாளில், காலையில் இருந்தே மலர்ச்சியாக இருங்கள்.
மன மகிழ்ச்சியுடன் இறைவனை தொழுங்கள். உங்கள் காபியை அனுபவித்துக்
குடியுங்கள். கல்லூரியோ, அலுவலகமோ உற்சாகமாக எல்லோருக்கும் சிரித்த
முகத்தோடு ஸலாம் சொல்லுங்கள். எப்படி இருக்கீங்க என்று கேட்பவர்களிடம் “ஏதோ
இருக்கேன்” என்று சோகமாக சொல்லாமல், அல்ஹம்துலில்லாஹ்… நன்றாக இருக்கேன்
என்று சந்தோஷமாக சொல்லுங்கள். மதிய உணவை நண்பர்களோடு ஒன்றாக உட்கார்ந்து
பகிர்ந்து சாப்பிடுங்கள். மாலைக்குள் உங்களைச் சுற்றி உள்ள நிறையப் பேர்
சந்தோஷமாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.
மதியம் வருகின்ற முதுகு வலி, 3 மணிக்கு
வருகின்ற தலைவலி, எப்போதும் வெறுப்பேற்றுகின்ற நண்பர்கள் இந்தத்
தொந்தரவுகள் இன்று இருந்திருக்காது.
ஏன்?காரணம், இன்று முழுவதும் நீங்கள் சந்தோஷத்தின் காரணிகளை மட்டுமே கவனித்தீர்கள். உங்கள் சந்தோஷ எண்ணம் உங்களிடத்தில் ஆழமாக இன்று பதிந்து இருந்தது.
கவலைப்பட வைக்கிற காரணிகளை கவனிக்க விடாமல் சந்தோஷ உணர்வு உங்களை இயக்கியது.
எதை தேடுகிறீர்களோ அதுதான் கிடைக்கும்.
சந்தோஷமாய் இருப்பது என்பது உங்கள் விருப்பம் தான். அதை ஏன் யாரிடமோ அடமானம் வைக்கிறீர்கள்?
-BE HAPPY-


0 Comments