(ஸாதிக் ஷிஹான்)
பாதுகாப்பு
கடமையில்
20,000
பொலிஸார்
தவறான பிரசாரங்களை
நம்பவேண்டாம்
சிரேஷ்ட பிரதி
பொலிஸ் மா அதிபர்
அநுர சேனநாயக்க
பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு கடமைகளில் 20 ஆயிரம்
பொலிஸார் மேலதிக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவற்றில் 5000
போக்குவரத்து பொலிஸாரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான பாதுகாப்பு, அவர்கள் தங்கி இருக்கும்
ஹோட்டல்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்குத் தேவையான தங்குதடையற்ற போக்குவரத்து
வசதிகளையும் பொலிஸ் திணைக்களமே மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இலங்கை வரும் அரச தலைவர்களின் வருகைக்கும் பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும்
ஒன்றுடன் ஒன்று பாதிக்காத வகையில் தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம்
திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்து
வரும் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக
ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க
தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த
செய்தியாளர் மாநாட்டில், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி
ஆரியரத்ன அதுகல, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்
அநுர சேனநாயக்க, பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்
மா அதிபர் அமரசிறி சேனாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க இங்கு விளக்கவிக்கையில்:-
மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு கொழும்பு நகரும் அதனை அண்டிய பிரதேசமும் முற்றாக
ஸ்தம்பிதம் அடையும் என்றும் இதனால் அன்றாட நடவடிக்கைகளை பொது மக்கள் முன்னெடுக்க
முடியாத நிலைமை ஏற்படும் இதனால் பொதுமக்கள் கொழும்புக்கு வரவேண்டாம் என்று எஸ்.எம்.
எஸ். ஊடாக பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பிரசாரத்தில் எந்த வித உண்மையும் இல்லை. இதனை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம்.
இது போன்ற பிரசாரமானது நாசகாரிகளின் செயலாகும். இதுவும் ஒரு குற்றச் செயலாகும்.
பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே
திட்டமிட்ட அடிப்படையில் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
9ம் திகதி முதல் 15ம் திகதி காலை வரை அரச தலைவர்களின் வருகை இடம்பெறவுள்ளது. இந்த
நாட்களில் கட்டுநாயக்க விமான நிலையம் தொடக்கம் அதிவேக வீதி, அவர்கள் தங்கியிருக்கும்
ஹோட்டல் வரையில் மூன்று வீதிகள் என்று வகைப்படுத்தியுள்ளன.
அந்த வீதிகள் மாத்திரம் தேவைக்கு ஏற்ப அரச தலைவர்களின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு
முன்னர் மூடித் திறக்கப்படும். அதே சமயம் அந்த அரை மணிநேரத்திற்குள் பொது மக்களின்
நலன்கருதி மாற்று வழிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரச தலைவர்கள் கொழும்பிலுள்ள ஹில்டன், கிங்ஸ்பெரி, தாஜ் மற்றும் சினமன் ஆகிய நான்கு
ஹோட்டல்களில் மாத்திரமே தங்கியிருக்கவுள்ளனர். அதேபோன்று பிரிட்டிஷ் இளவரசர்
சார்ள்ஸ் மாத்திரம் கொழும்பு-07, ரொஸ்மீட் பிளேஸிலுள்ள டின்டெகல் ஹோட்டலில் தங்கி
இருக்கவுள்ளார். அத்துடன் மேற்படி ஹோட்டல்களிலிருந்து பிரதான நிகழ்வுகள்
நடைபெறவுள்ள நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்குக்கும், பண்டாரநாயக்க சர்வதேச
ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திற்குச் செல்லும் வீதிகள் மாத்திரம் 15, 16ஆம்
திகதிகளில் மாநாடு ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் மூடி அவர்கள்
மண்டபத்திற்குள் சென்றடைந்த பின்னர் மீண்டும் வழக்கம் போன்று திறந்து வைக்கப்படும்.
இதேபோன்று பத்தரமுல்ல லோட்டஸ் ஏட்ஜில் நடைபெறும். நிகழ்வில் கலந்து கொள்ள செல்லும்
தினத்தில் மாத்திரம் கொழும்பில் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து லோட்டர்ஸ் ஏஜ் வரையிலான
வீதி அரை மணி நேரத்திற்கு முன்னர் மூடி திறக்கப்படும். 15ம் திகதி காலை 8.45
மணிமுதல் 9.45 மணி வரையிலான நேரத்திற்குள் மாத்திரம் விதிகள் மூடப்படும் என்றார்.
இந்த நேரத்தில் இவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இருந்து வாகன பவனியாக அழைத்து
செல்லப்படும் என்றார். இதேவேளை இலங்கை வரும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பொலிஸ் வாகன
பவனியுடன் அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

0 Comments