Subscribe Us

கலவரத்தின் கோரக் கரங்களில் சிக்கிய ஓர் முஸ்லிம் சகோதரியின் கதை!

(A.J.M.மக்தூம்)

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மியன்மார் பகுதியானமிக்தீலாவில் வெடித்த பௌத்த முஸ்லிம் கலவரத்தின் மூலம் ஏற்பட்ட வன்முறை செயற்பாடுகளின் அகோரம் பல்லாயிரக் கணக்கான எமது சகோதர முஸ்லிம்களை தமது இருப்பிடங்களை இழந்து அகதி வாழ்க்கை வாழ நிர்பந்தித்தது.

இதன் விளைவால் மிக்தீலா நகரத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை கட்டிடமொன்றில் மாத்திரம் 3600 முஸ்லிம் சகோதரர்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் மாகியா என்கிற 30 வயதை அடைந்துள்ள முஸ்லிம் விதவைப் பெண்ணும் ஒருவராவார்.

கடந்த மார்ச் 22 ம் திகதி பிரதான நான்கு நகரங்களில் பர்மா அதிபர் அவசரகால நிலைமையைப் பிரகடனப் படுத்தியிருந்தார். மிக்தீலா, தாஸி, வாண்ட்வீன், மாஹ்லீங்க் என்பனவே அந்த நான்கு நகரங்களுமாகும். அத்தோடு அண்மையில் அங்கே மூண்ட வன்முறையைமுடிவுக்கு கொண்டுவருமாறும் இராணுவத்தைப் பணித்திருந்தார் பர்மா அதிபர். 2012 ம் ஆண்டு முதல் உலகையே உலுக்கிய ராகீன் பௌத்த தீவிர வாதிகளின் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை விடவும் இந்த நிகழ்வுகள் கொடூரமானதாக கருதப் படுகிறது.

இதன் போது முஸ்லிம்களுக்கு சொந்தமான பல மஸ்ஜித்கள், மதரசாக்கள், நூற்றுக் கணக்கான வீடுகள், குடியிருப்புக்கள் போன்றன தீயிட்டு அளிக்கப் பட்ட மையானது அனைத்து முஸ்லிம் உள்ளங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. பல முஸ்லிம் உயிர்களை காவு கொண்ட இந்த இன வாதத்தின் ஈனச் செயல்கள் அப்பாவி பெண்களையும், எந்தப் பாவமுமறியா குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. இறந்தோர் மற்றும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பற்றிய சரியான எண்ணிக்கையைக் கூட உள்நாட்டு

அதிகாரிகள் வெளியிடாமை இன்னும் வேதனை அளிக்கிறது. 10,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் வசிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இனக் கலவரத்தின் கோரப் பிடியில் சிக்கிய எமது சகோதரியான அந்த முஸ்லிம் யுவதி மாகியா பின்வருமாறு தனது அனுபவங்களையும், வேதனைகளையும் மனித நேய செய்தி சேவை வலையமைப்பு (IRIN) க்கு வழங்கிய பேட்டியின் ஊடாக எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

இப்படியான ஓர் அசம்பாவிதம் எனது வாழ் நாளில் நிகழும் என நான் கனவிலும் காணவில்லை, அனைத்துமே வெகு சீக்கிரமாக நடந்தேறியது, எங்கு பார்த்தாலும் தீ பிளம்புகள், அனைத்துமே பற்றி எரிந்து விட்டன, எனது உயிரையாவது தற்காத்துக் கொள்ள தப்பிச் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அனைத்து உடைமைகளையும் இழந்து விட்டேன், என்னதான் நடந்தேரியதோ?! ஒன்றுமே புரியவில்லை. நான் என்றுமே பார்த்திராத ஒருசிலர் திடீரென வந்து எனது வீட்டையும் கடையையும் தீயிட்டு கொளுத்தினார்கள்; ஆனால் எதற்காக...?!

இவ்வாறு எமது உடைமைகள் எல்லாம் அழிந்து நிர்கதியில் தவிக்கும் நாம் எவ்வாறு மீண்டும் எமது வாழ்வை கட்டி எழுப்புவது என்று தெரியவில்லை. எனது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். எனது குடும்பத்துக்காகவும் இரண்டு மாதமேயான எனது கைக் குழந்தைக்காகவும்நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். நாம் அணிந்திருக்கும் ஆடையைத் தவிர வேறொன்றும் இப்பொழுது எம்மிடம் இல்லை.

இவை அனைத்தையும் விட மோசம் என்னவென்றால் இரத்த அழுத்தம் மற்றும் சிறு நீரக கோளாறுக்காக நான் அருந்தி வந்த மருந்துகளையும் இப்போது இழந்து நிற்கிறேன். வயது முதிர்ந்த எனது பெற்றோரை பாதுகாக்க எந்த தேர்வும் என் முன்னிலையில் இல்லாது தவிக்கிறேன். தீரா நோயாளியான நான் மருந்துகள் இல்லாத நிலையில் நாளை ஏதேனும் எனக்கு நிகழ்ந்து விட்டால் எனது இரண்டு மாத குழந்தயின் நிலை என்ன? என் நோயின் காரணமாக குழந்தைக்கு தாய்பாலை நிறுத்தி புட்டிப் பாலையே அருந்த பழக்கி இருந்தேன். ஆனால் இப்போது என்னிடம் குழந்தைக்கு வழங்க எந்த உணவு கூட இல்லை என்பதை நினைக்கும் போது இன்னும் எனது உள்ளம் உடைந்து போகிறது. வன்முறை வெடித்த போது என்ன செய்வது? எங்கே செல்வது? என ஒன்றும் புரியாது திணறிப் போய் கிடந்தோம்.

ஆயுதங்களுடன் பாதையோரங்களில் சுற்றித் திரியும் பௌத்த தீவிர வாத
கும்பலின் கைகளில் சிக்கிக் கொண்டால் கொலை செய்து விடுவார்கள் என்ற
பயம் வேறு எம்மை வதைத்து கொண்டிருந்தது. இறுதியில் தப்பிச் செல்வது என்ற தீர்மானத்துக்கு வந்தோம், எனது வயது முதிர்ந்த பெற்றோர், எனது சகோதரர் உட்பட அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பக்கத்தில் உள்ள ஒரு காட்டை நோக்கி விரைந்தோம். அந்நேரத்தில் நாம் சுமார் 200 பேர் வரை இருந்தோம்.

அந்த காட்டினுள் மூன்று நாட்களாக பதுங்கியிருந்தோம். உண்ணுவதற்கு உணவுவோ, அருந்துவதற்கு தண்ணீரோ அற்ற நிலையில் தத்தளித்தோம். கால நிலையோ கடும் வெப்பமாக இருந்தமையானது வேதனைக்கு மேல் வேதனையை ஏற்படுத்தியது. அங்கிருந்து செல்வதற்கான துணிவும் எமக்கு இருக்கவில்லை.

உறங்கவும் முடியவில்லை. அச்சத்தின் காரணமாக அங்குமிங்கும் அசைவதை கூட தவிர்த்துக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் நிதானமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கக் கூட எம்மால் முடியவில்லை. இது ஒரு புறமிருக்க எம்மைத் தீர்த்து கட்ட தீவிர வாதிகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில் திடீரென தாக்கிவிட போகிறார்கள் என நாம் கேள்விப் பட்டிருந்த வதந்திகள் இன்னும் எம்மை ஆட்டி வதைத்து  கொண்டிருந்தது. இறுதியில் நான்காவது நாள் பொலிசார் வந்து எம்மை காப்பாற்றி இந்த பாடசாலையில் தங்க வைத்தனர்.

இதற்கு முன் ஒரு போதும் நாம் இவ்வாறு சோதிக்கப் படவில்லை. இப்படியான நிகழ்வு ஏன்? எப்படி? ஏற்பட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை! இதற்கு முன் எந்நிலையிலும் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் இப்படியான கொடிய யுத்தம் உருவாகவில்லை.

எனது வீட்டுக்கு போக விரும்புகிறேன்; ஆனால் எப்போது அது சாத்தியமாகும் என்பது எனக்கு தெரியவில்லை. நடந்துமுடிந்த நிகழ்வுகளெல்லாம் என்னைப் பொறுத்த மட்டில் நம்ப முடியாத பேர் அதிர்ச்சியாகவே இருக்கிறது!

(நன்றி: ரோஹிங்கிய செய்தி நிறுவனம் RNA)

இந்த நிகழ்வை செவியுறும் மனித நேயமுள்ள எந்த நெஞ்சமும் உருகாமல் இருக்காது. 
 
அந்த ஈவிரக்கமற்ற கோரக்கரங்களில் சிக்கிய பல்லாயிரக் கணக்கானோரில் இருந்து ஒருவரின் சோகக் கதையே இது. அங்கு  தத்தளிக்கும் எத்தனையோ நெஞ்சங்களின் நிலை இதே போன்றோ இதை விடவும் மோசமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. இன்னும் உலகின் எத்தனை பாகங்களில் அராஜகம் புரியும் அரக்கர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கும் அப்பாவிகளின் கதைகளை நாளாந்தம் கேள்வி படுகிறோம். இவ்வாறான அநியாயங்கள் எந்த  மதத்தவர், இனத்தவர் மீது மேற்கொள்ளப் பட்டாலும் கண்டிக்கப் படவேண்டும்.

அராஜகத்தை அரங்கேற்றியவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரும் இன, மத பாகுபாடின்றி தண்டிக்கப் படவேண்டும்.

அதேநேரத்தில் இவ்வாறான சம்பவங்கள் எமக்கு இறைவன்அருளியுள்ள அருட்கொடைகளை விளங்கிக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இவ்வாறான அளவில்லா அருட்கொடைகள் எல்லாம் வழங்கிய இறைவனுக்கு நாம் எவ்வளவு தூரம் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.
 
  • இன்னுமின்னும் அவனது  கடமைகளை உதாசீனம் செய்து வாழ்வது பொருத்தம் தானா?

  • அவனது கட்டளைகளுக்கு மாறு செய்வது சரிதானா? 
 
சற்று  எம்மை சுய பரிசோதனை செய்வோம். மேலும் இவ்வாறு அநியாயங்கள், அட்டூழியங்களுக்கு ஆளாகி இருப்போரும் எமது சகோதரர்களே. 
 
இவர்களின்  ஈடேற்றத்திற்காக நாம் என்ன பங்களிப்பைச் செய்துள்ளோம்.  சற்று சிந்தித்து அவர்களுக்காக இருகரமேந்தி இறைவனிடம் ஒரு துஆவையேனும் செய்வோம்.  இறைவா! உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும்  அநியாயக் காரர்களின் கரங்களில் இருந்து பாது காப்பாயாக,  நிம்மதி, பாதுகாப்பு நிறைந்த வாழ்வை அவர்களுக்கு  வளங்கிடுவாயாக, அநியாயமாக கொலை செய்யப் பட்டோர் அனைவரையும் ஷுஹதாக்களுடன் சேர்த்தருள்வாயாக...

Post a Comment

0 Comments