Subscribe Us

சீனாவில் எண்ணெய்க் குழாய் வெடித்து விபத்து: 35 பேர் சாவு

 சீனாவின் ஷன்டாங் மாகாணத்தில் வெள்ளிக்கிழமையன்று, எண்ணெய்க் குழாய் வெடித்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 130 பேர் காயமடைந்துள்ளனர்.
 
ஹுவாங்டாவ் மாவட்டம் கிங்டாவ் கடலோர நகரத்தில் உள்ளது சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சினோபெக். அங்கு 176 கி.மீ நீளமுள்ள எண்ணெய்க் குழாயின் பழுது நீக்கும் பணியில் பணியாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
விபத்து ஏற்பட்டதன் காரணமாக வெளியேறிய எண்ணெய், கடலில் கலக்காத அளவிற்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிங்டாவ் நகராட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
 
கடலுக்குள் 2 மீட்டர் தூரத்திற்கு எண்ணெய்ப் படலம் ஏற்பட்டுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடலில் எந்தவித மாசும் ஏற்படவில்லை என்று கடலோரப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
தொழிற்சாலை சார்ந்த பாதுகாப்பில் சீனா மோசமான நிலையில் இருப்பதாகவும், இந்த ஆண்டின் முதல் பாதியில் பணியிடங்களில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 28,000 பேர் உயிரிழந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Post a Comment

0 Comments