Subscribe Us

"மிஹிந்து சென்புர" வீடமைப்புத் தொகுதி எதிர்வரும் 18 ஆம் திகதி மக்களிடம் கையளிப்பு

கட்சி பேதங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு என்றில்லாமல்  சமமான முறையில் அனைவருக்கும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளரும் நகர வீடமைப்பு அதிகார சபையின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அனைவருக்கும் வீடு எனும் சிந்தனைக்கேற்ப நாட்டிலுள்ள குறைந்த வருமானத்தையுடைய வறிய குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது வீட்டுத்திட்டம் 'மிஹிந்து சென்புர" எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
 
இந் நிலையில் இது குறித்து தெளிவுபடுத்தம் ஊடகவியலாளர் மாநாடு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்று (4) திங்கட்கிழமை இடம்பெற்றது.
 
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அனைவருக்கும் வீடு என்ற சிந்தனைக்கு அமைவாக தொமட்டகொடை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள 500 வீடுகளை உள்ளடக்கிய முதலாவது வீடமைப்புத் திட்டமான ' மிஹிந்து சென்புர" எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
 
பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாடு இடம்பெறும் இந்நேரத்தில் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற போதிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடும் எமக்குள்ளது.
 
இது மிகவும் குறுகிய காலத்தில் அதாவது 2 வருடகாலத்தில் நாம் ஏற்கெனவே அறிவித்ததன் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 
குறிப்பாக புறக்கோட்டையிலும் துறைமுக பகுதிகளிலும் குறைந்த வருமானத்துடன் தொழில் புரியும் மக்களுக்கே இவ் வீடுகள் வழங்கப்படவுள்ளன. கட்சி பேதங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு என்றில்லாமல்  அனைவருக்கும் சமமான முறையில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும்.
 
இவ் வீட்டுத்திட்டத்தில் அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. அதாவது சுகாதார சேவை, விளையாட்டு வசதி, வாகனத் தரிப்பிட வசதி மற்றும் பொழுது போக்கு வசதிகள் போன்றன அமையப்பெற்றுள்ளன. இதன் மூலம் சிறுவர்களுக்கு சிறந்த சூழல் உருவாக்கி கொடுக்கப்படவுள்ளது.
 
மக்களின் நலன் கருதியே இவ் வீட்டுத்திட்டங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இத்திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும் போது இதற்கெதிராக பல தடைகள் மற்றும் பல விதமான வதந்திகள் பரப்பப்பட்டன. இருப்பினும் நாம் இதனை முன்னெடுத்தோம். அதில் வெற்றி கண்டுள்ளோம்.
 
இதனது முக்கிய நோக்கம் கொழும்பு நகரை மேம்படுத்துவதே ஆகும். இவ்வாறு கொழும்பு நகரத்தில் 30 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களும் வீட்டுப்பிரச்சினைக்கு பல தீர்வுகளை முன்வைத்தன. ஆனால் அவை பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை.
 
கொழும்பு நகரத்தில் கிட்டத்தட்ட பெட்டி, பிளாஸ்டிக் மற்றும் தகரங்களினால் அமைக்கப்பட்ட 60 ஆயிரம் குறைந்த வருமான பெறுவோரின் குடிசை வீடுகள் உள்ளன. இருப்பினும் அவற்றில் இதுவரை 40 ஆயிரம் குடிசை வீடுகள் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறானவர்களுக்கு ஒரே தடவையில் வீடுகளை வழங்க முடியாது. பகுதி பகுதியாகவே வழங்க முடியும். இதனொரு பகுதியாகவே தொட்டகொடை வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
 
2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 15 ஆயிரம் வீட்டுத்திட்டம் தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. எல்லாம் நிறைவடையும் நிலையில்  கொழும்பு நகரம் மாற்றமடையும் போது அனைவருக்கும் நாம் முன்னெடுத்த செயற்பாடு தெளிவாக விளங்கும் என அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments