ஹெய்டி நாட்டைச் சேர்ந்த புகைப்படவியலாளர் ஒருவரின் பதிப்புரிமை
பெற்ற புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமைக்கா ஏ.எவ்.பி (ஏஜென்ஸ் பிரான்ஸ்-ப்ரஸ்) மற்றும் அதனது பங்காளி நிறுவனமான கெற்றி இமேஜெஸ் நிறுவனங்களுக்கு 1.22 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 16 கோடி ரூபா) நஷ்டஈடாக வழங்குமாறு அமெரிக்காவின் நீதிபதிகள் குழுவொன்று தீர்ப்பளித்துள்ளது.
ஹெய்டியில் 2010.01.12இல் 250 ஆயிரம் மக்கள் பலியான பூகம்பம் தொடர்பான டேனியல் மோரெல் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த 8 புகைப்படங்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தியமைக்காகNவு குறித்த நிறுவனங்கள் மீது இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் காணப்படும் புகைப்படங்களை வர்த்தக நோக்கில் பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களுக்கு உதாரணமாக இந்த வழக்கு விளங்குகிறது.
டேனியல் மோரெல் மேற்படி படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அவரது அனுமதியின்றி குறித்த நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. அப்புகைப்படங்கள் பொதுவிநியோகத்துக்கானவை தான் கருதியதாக ஏ.எவ்.பி. தெரிவித்தது.
இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த மோரெல் சுமார் 4 வருட சட்டப் போராட்டத்தின் பின்னர் வெற்றிபெற்றுள்ளார். 7 நீதிபதிகள் கொண்ட குழு வழங்கிய இந்த தீர்ப்பினை வெளியிட்டதன் பின்னர் தனக்கு உதவிய அனைவருக்கும் மோரெல் நன்றி வெளியிட்டுள்ளார்.
இவ்வழக்கு குறித்து மோரெல் கூறுகையில், 'இந்த வெற்றி அனைத்து கலைஞர்கள் மற்றும் பதிப்புரிமை வைத்திருப்பவர்களுக்கான வெற்றி. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டுமொருறை எங்களில் ஒருவருக்கு இது போன்று நடைபெறாது என எதிர்பார்க்கிறேன்' என ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார்.
மோரெலின் ஒப்புதலின்றி தன்னிச்சையாக செயற்பட்டு பதிப்புரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்காக 1.2 மில்லியன் அமெரிக்க டொலரும் டிஜிடல் மிலேனியம் பதிப்புரிமையை மீறியமைக்காக மேலதிமாக 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்பட வேண்டுமென தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மோரெலின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதேவேளை புகைப்படவியலாளருக்கு எதிராக வேண்டுமென்றே ஏ.எவ்.பி செயற்படவில்லை எனவும் அப்போதே தவறைத் திருத்திக்கொள்ள முயற்சித்ததாகவும் ஏ.எவ்.பி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

0 Comments