நமது ஊரில் வீதிகளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் பல நபர்களை நமது மக்கள்
"பிச்சைக்காரன்" என்று கூறுவது வழக்கம்! ஆனால் அவர்கள் வீதிகளிலே அன்றாடம்
பார்க்கும் விடயங்களை நாம் பார்ப்பது குறைவு. அவர்களுக்கு நமது மக்கள்
எப்படிப்பட்டோர்ர் என்று அழகாக கூறும் அளவுக்கு அறிவு பெற்றோர் எனவும்
கூறலாம். இப்படி ஒருவர் நமக்கு மத்தியில் சாராயம் குடித்து விட்டு
வீதிகளிலே நம்மை ஏசி ஏசி நடந்தே நீர்கொழும்பு வரைக்கும் சென்று வருவார்.
நமது மக்களால் "இவரை திருத்த முடியாது" என்று கைவிடப்பட பலரில் ஒருவர்.ஒரு நாள் நமது தொண்டரில் ஒருவர் அவரோடு 20 நிமிடம் தனியாக பேசுகிறார். முதலில் அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது "பைத்தியக்காரனோடு ஏன்பா வீனா டைம போக்குரா" என்று பலர் கிண்டலாய் கேட்டுச் சென்றார்கள். அதனை பொருட்படுத்தாது 20 நிமிடம் அவரோடு மிகவும் கஷ்டப்பட்டு பேசிவிட்டு அவரை தன்னுடைய மோட்டார் பைக்கிலே ஏற்றி வீடு வரைக்கும் சென்றார். அங்கு அவரின் வீடு ஒரு பழைய கைவிடப்பட்ட ஓலை கொட்டு என்பதை அறிந்துகொண்டார் எமது தொண்டர்.
அவரின் பிரச்சினையையும் வீட்டையும் அறிந்துவிட்டு வீடு திரும்பினார் நமது தொண்டர். இரண்டு நாள் கழித்து அவரின் வீட்டை சுற்றி வசிப்போரிடம் அவரைப்பற்றி விசாரித்தார். அவரின் பிரச்சினை மற்றும் சுற்றி வசிப்போரின் கதைகளை வைத்து உண்மையான பிரச்சினையை புரிந்த நமது தொண்டர்.
முதலில் அவரின் தங்குமிடத்தை சுத்தம் செய்கிறார். அடுத்த நாள் அவருடன் சில நிமிடம் மீண்டும் பேசுகிறார். அப்போது புரிந்து கொண்டார் இவர் விளையாட்டுக்காக கூட பொய் சொல்ல மாட்டார் என்றும் இவருக்கு அவரின் மனைவியோடு கொண்ட அளவுக்க அதிக பாசமே இதற்கு காரணம் என்றும். அதன் பின் சத்தியம் செய்கிறார் உங்கள் பிரச்சினையை நான் முடித்து வைக்கிறேன் என்னோடு வாருங்கள் என்று.
தொண்டரோடு அவர் வீடு சென்ற அந்த நபர் தொண்டரின் வீட்டிலே குளித்து துப்பரவு செய்யப்படுகிறார். தொண்டர் ஆடைகளை கொடுக்கிறார் அணிவதற்கு; இருவரும் செல்கிறார்கள் தொண்டரின் நம்பர்களை சந்திப்பதற்கு. அங்கோ நண்பர் வீட்டில் "இந்த குடிகாரனை வீட்டுக்கு உள்ளே கூட்டி வரவேண்டாம்" என்று தொண்டருக்கு ஏச்சு. உடனே மீண்டும் தொண்டர் வீடு சென்று அவரை தூங்க வைத்து விட்டு சாப்பாடு வாங்க வெளியே வந்து ; மீண்டும் வீட்டுக்கு சென்றால் அவரை காணவில்லை.
இரண்டு நாளுக்கு பின் மீண்டும் பழைய நிலையில் குடித்துவிட்டு வீதிகளிலே பேச்சு வாங்கி கொண்டு அவர் வருவதை கண்டு தொண்டர் கவலைப்பட்டார்.
அது நோன்பு மாதம் (ரமலான்). ஆகவே மீண்டும் அவரை பிடித்து மோட்டார் பைக்கிலே ஏற்றி தொண்டர் வீட்டுக்கு கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் பத்ரூமிலே போட்டு மூடிவிட்டு. அடுத்த நாள் காலை அவரை மீண்டும் துப்பரவு செய்து, மீண்டும் புதிய ஆடைகளை போட்டு இஹ்திகாப் இருப்பதற்காக பள்ளிக்கு கூட்டி சென்று இறுதி 7 நாட்கள் அவரோடு தங்கி மார்க்கத்தை படித்து கொடுக்கிறார்.
நாளை பெருநாள் என்பதால் அனைவரும் தத்தமது வீடு செல்கிறார்கள் ஆகவே அவருக்கும் புதிய ஆடைகளை வாங்கி கொடுத்து பெருநாள் இரவு அவருக்கு சொந்தமான அவருடைய தங்கையின் வீட்டில் கொண்டு போய் "அவர் திருந்தி விட்டார்" என்று கூறி ஒப்படைத்து விட்டு சலாம் கூறி சந்தோசத்துடன் வீடு வந்தார் நமது தொண்டர்.
ஆனால் அடுத்த நாள் பெருநாள் தொழுகை முடிந்து ஜும்மா தொழுதுவிட்டு நமது தொண்டர் வரும் போது அவரின் நண்பர் ஒருவர் கூறுகிறார் "உன்னுடைய கூட்டாளி மீண்டும் குடிக்க போகிறார், போய் ஒருக்கா பாரு" என்று. உடனே நமது தொண்டர் அவரை தடுப்பதற்கு சாராயம் விற்கும் இடம் செல்கிறார், அங்கோ போகும் வழியிலே அந்த நபர் இவரை பார்த்துவிட்டு குடிபோதையில் ஓடுகிறார்.
ஓடியவரை புடித்து மோட்டார் பைசிகிலிலே ஏற்றி "போலீஸ் கொண்டு போவா" என்று பயம் காட்டி அவரை மீண்டும் ஒரு தோட்டத்திலே கொண்டு போய் குடி போதை தணியும் வரை அவரோடு இருந்து அவருக்கு புத்தி மதி கூறி அவரை ஒரு தெரிந்த நபரோடு சேர்த்து தோட்டத்தில் வேலை செய்வது போல ஒரு விடயத்தை ஏற்படுத்தி கொடுத்து வீடு திரும்பினார் நமது தொண்டர்.
இத்தனை முயற்சியின் பின் நமது தொண்டர் தொடர்ந்தும் அவருக்கு ஒரு தொழிலை ஏற்படுத்தி கொடுப்பதற்காக பலரோடு பேசியும் எதுவும் கைகூட வில்லை ஆனால் அல்லாஹ்வின் கருணையால் அந்த நபர் தொண்டரிடம் வந்து "தம்பி எனக்கு யாரும் தேவை இல்லை, நா இதுக்கு பிறகு குடிக்க மாட்டேன்,நா சந்தைல சாமான் தூக்கியாவது போலச்சிகிடுவேன்,நீங்க கஷ்டப்படாதீங்க எனக்காக" என்று கூறிவிட்டு சென்றார்.
தொண்டரின் கண்களோ கலங்கின ; இவர் தற்போது இவரின் குடும்பத்தோடு அழகாக வாழ்கிறார். அவர் பிரிந்து இருந்த மனைவியோடு ஒன்றாக சேர்ந்து அந்த தொண்டருக்கு வலீமா சாப்பாடும் கொடுத்து இருக்கிறார்.
இவர் இதையும் தாண்டி இவர் சாராயம் குடிக்கும் போது இவரோடு குடித்த நபர்களையும் திருத்த வேண்டும் என்ற ஆசையால் 9 நபர்களை திருத்துவதற்காக போராடுகிறார்.

0 Comments