அனுபவம் இல்லாத சிறியவன் நீ, ஆயினும் அன்பு அதிகம் உள்ளவன். ஆனாலும் உன்
வார்த்தைகளில் உள்ள உரிமையை அறிவேன். என் மீது கொண்ட அன்பினால் நீ அதனை
சொன்னாய்…
அக்கா அன்பிற்கு அடிமையாகி விட்டீர்கள், உங்கள் ரணம்
ஆறவேண்டும். இந்த அன்பெனும் வட்டத்திலிருந்து வெளியில் வாருங்கள். உங்களை
காணுங்கள் சகோதரி என்றான் என்னுடன் பிறவா சகோதரன்.
அன்பிற்கு அடிமையாகக் கூடாது என்றால் எதற்கு தான் அடிமையாகலாம் என் அன்புச் சகோதரனே?
ஆண்டவன் நடத்தும் நாடகத்தில் நீயும், நானும் ஒன்று. அந்த இறைவன் கொடுத்த என் வாழ்க்கை அனுபவத்தில் நந்தவனமும் உண்டு, நொந்த மனமும் உண்டு.
நான் படித்த சோகத்தினையும் நந்தவனமாக மாற்ற அந்த இறைவனால் மட்டுமே முடியும்.
ஆளத் துடிக்கும் மனசுகள் தான் இன்று அதிகம். அமைதியாக ஆனந்தமாக, அன்பை
சுமக்கும், உயிர்கள மிகக் குறைவு அதனையும் வேண்டாம் என்கிறான் என் சகோதரன்?
எங்கும் வஞ்சம், எதிலும் வஞ்சகம், அரை டன்
அன்பையும், ஒரு பை நிறைய பண்பையும் பரணில் போட்டு விட்டு,பணத்தையும்,
பகட்டையும், பண்பாடு கெட்ட மனதோடு என்னை போகச் சொல்லுகிறாயா?
அன்போடும், பண்போடும், நம்மைச் சார்ந்தவர் மீது அக்கறையோடும் இருந்தால் எங்களுக்கு புனிதப் பட்டப் பெயர்கள் – லூஸு, வாழத்தெரியாதவர், பைத்தியக்காரர்கள்.
மிருகமாகவே வாழுங்கள், அடுத்தவரின் பசி அறியாது அடுத்தவரின் வலி
அறியாது, அடுத்தவரின் துன்பமறியாது, அடுத்தவரின் இன்பத்தினையும்
கொலைவெறியுடன் தான் காண்போம்.
வாழ்க்கை என்பது, சுயநலம் என்ற சிறிய வட்டத்துக்குள் மட்டும் சிதைந்து போவது தான் என்பது இன்றைய நிலை. அடுத்தவர்கள் காலை வாரி விடவும் அவர் சுதாரிக்கும் முன்னே சுகம் காணவும் கற்றவர்களே, பெரும்
வேதனைகளையும் சுமக்கும் சிலுவைகளாக நீங்கள் மாறவேண்டாம், அதனை மறக்க
கைகொடுக்கும் (உத்தமர்களாக வேண்டாம்), நல்ல உள்ளமாக இருத்தல் கூடாதா?
மனித மனங்களை அறுத்து சுவைக்க பழகிக் கொண்டதால் நாமும் மிருகமும் ஒன்றே.
காலையில் கற்பழிப்பு, மாலையில் கருச்சிதைவு என்று வேகமாக முன்னேறிக்
கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களே, கொஞ்சம் உங்கள் வேகத்தினை
குறைத்திடுங்கள் இல்லையேல், மிருகம் போல நம்மை நாமே அடித்துக் கொல்லும்
காலம் வெகு தொலைவில் இல்லை.
எதற்கும் அடிமை ஆகாமல் மனிதன் இருக்க முடியும், ஆனால் அன்பிற்கும் அடிமை இல்லை என்றால் அவன் பெயர் என்ன என்று எனக்கு தெரியவில்லை.
முயற்சித்தால் மூடனாக நான் மாறலாம், ஆனால் நல்ல இதயத்துடன் இன்பமாக இறக்க விரும்புகிறேன், இதயமற்ற அரக்கியாக அல்லவே.
உலகத்தில் மிகவும் தேவையான ஒன்று பணமோ, பொருளோ இல்லை, மனித நேயம், அது
இருந்தால் போது மற்ற அனைத்தும் மனிதன் வசமாகும் எனபதில் எனக்கு ஐயமில்லை.
அற்பப் பிறவிகள் தரும் சோதனைகளை சோகங்களாக கொள்ளாமல், சாதனைகளாக எண்ணுவேன், எத்துனை பேர் காயப் படுத்தினாலும் வீழ மாட்டேன், வீழ்ந்தாலும் அன்பு என்ற விதையாகவே வீழ்வேன், விருட்சமாவேன் என்ற நம்பிக்கையில்.
அன்பென்ற ஆயுதம் கொண்டு வெல்ல முடியாவிடில் அந்த ஆயூதத்தால் மடிவது மகிழ்ச்சி ! !
இப்போதும் உனது அன்புக்கு அடிமையாகியே இதனை பதிவிடுகிறேன். முடிந்தால் இதுவும் வேண்டாம் என்று சொல்லேன்.

0 Comments