Subscribe Us

header ads

அஸ்கிரி மாநாயக்க தேரரின் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது! விபரங்கள் உள்ளே...


அஸ்கிரி மாநாயக்க தேரர் வராகொட ஞானரதன தேரர் உள்ளிட்ட அஸ்கிரி பீடத்தின் அண்மைய அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் எதிர்நோக்கி வரும் சவால்கள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அஸ்கிரி மாநாயக்க தேரர் தலைமையிலான அஸ்கிரி பீடம் கடந்த 20ம் திகதி கடுமையான தொனியில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
பௌத்த பிக்குகள் இழிவுபடுத்தப்படக் கூடாது எனவும் கலகொடத்தே ஞானசார தேரரின் கருத்தையும் செவிமடுக்க வேண்டும் எனவும் சிங்கள பௌத்தர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கப்பட்டிருக்கக் கூடாது என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அஸ்கிரி பீடாதிபதி வெளியிட்ட அறிக்கை போன்ற அறிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றது.
போரினால் பாதிக்கப்பட்ட எமக்கு தற்போது நாட்டுக்கு தேவை நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான விடயங்களாகும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தேவை ஏற்பட்டால் பொய்யேனும் சொல்வதில் தவறில்லை. நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாது அதனை மேம்படுத்துவதற்கு உண்மையையும் பொய்யையும் பேசினாலும் பிரச்சினையில்லை.
ஞானசார தேரரின் செயற்பாடுகள் பொருத்தமுடையதல்ல, அதனை பௌத்தம் கற்பிக்கவில்லை.
பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு புத்தபெருமானை பெருமைக்குள்ளாக்க முடியாது.
பௌத்த மத கொள்கைகளை கோட்பாடுகளை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது. பல்வேறு காரணங்களினால் கடந்த காலங்களில் ஆயிரக் கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன.
மத மற்றும் தேசிய தலைவர்கள் கருத்து வெளியிடும் போது மிகவும் நிதானமாக கருத்து வெளியிட வேண்டும்.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. மாநாயக்க தேரர்கள் நிதானமாக செயற்படாவிட்டால் அவர்களது கௌரவத்தை அவர்களே அழித்துக் கொண்டதாகிவிடும்.
அனைத்து இன மற்றும் மத மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த நாட்டை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments