பெய்ஜிங்கிலிருந்து ஆஸ்திரேலியா வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்து முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணத்தின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தும், இந்தப் பெண் விமானத்தில் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்துள்ளார்.
பிப்ரவரி 19-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் போது விமானம் பெய்ஜிங்கிலிருந்து ஆஸ்திரேலியா வந்து கொண்டிருந்தது. அப்போது நடந்த இந்தச் சம்பவம் பற்றிய செய்தியை இப்போதுதான் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு கழகம் வெளியிட்டுள்ளது.
பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த போது பயங்கரச் சத்தத்துடன் ஹெட்ஃபோன் வெடித்துள்ளது. அவர் முகத்தில் கடும் எரிச்சல் ஏற்பட்டு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனேயே ஹெட்போனைக் கழற்றி தரையில் வீசியுள்ளார்.
ஹெட்போன் வெடிக்கும் சம்பவம் இதுவே முதல் முறை என்கிறது ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புக் கழகம்.
ஹெட்போன் எரிந்ததால் ஏற்பட்ட பொசுங்கிய நாற்றத்துடன் மீதி நேரத்தைப் பயணம் செய்ய நேரிட்டுள்ளது. பல பயணிகளுக்கு மூச்சு திணறலும் இருமலும் தொடர்ந்து இருந்ததாகவும் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது.


0 Comments