Subscribe Us

அறியாத விதிகளால் அல்லாஹ் உங்களை பலப்படுத்தட்டும் !


இதுவரை நேரில் பார்த்திராத ஒரு சகோதரியின் மரணம்
என்னை, நான்கு நாளாகியும் அடிக்கடி அழச் செய்துகொண்டிருக்கிறது..
தொண்டையில் ஒரு தனல் துண்டை விழுங்கியது போல்..
அந்த தகவலின் வலி இன்னும் புகைந்து கொண்டே இருக்கிறது...
எனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்கள் கூட,
இப்படி ஒரு பாரத்தை நெஞ்சில் ஏற்படுத்திவிட்டுப் போகவில்லை.
அல்லாஹ்வுக்காக வாழும் மனிதர்களின் ஆளுமைத் தாக்கம் இது...
அவர்கள் மீது அல்லாஹ் ஏட்படுத்தி விடுகின்ற உயர்ந்த நுணுக்கமான அன்பின் அடையாளம் இது...
உஸ்தாத் அகார், மிகவும் தேவையுள்ள நேரத்தில்.. மிகவும் நேசிக்கும் மனைவியை திடீரென இழந்திருக்கிறார்.
தனது இலட்சிய பயணத்தின் பின்புலத்தில், உலகம் அறியா தாதியாக, மருத்துவராக, பிரத்தியேக செயலாளராக, பணிப் பெண்ணாக, ஆன்மீகத் துணையாக நின்ற ஓர் அன்பு ஆத்மாவை இழந்திருக்கிறார்..
அவருக்குள் இருக்கும் ஓர் மெல்லிய குழந்தை உள்ளம் அவ்வப்போது குதூகலித்து மகிழும் ஒரு தாய் மடியை இழந்திருக்கிறது...
அவரது ஒவ்வொரு கண்ணீர் துளியிலும் அந்த நல்ல சகோதரியின் நேர்த்தியை வாசிக்க முடிகிறது...!
அவரது முகத்தை இப்படி ஒரு நாள் நான் பார்த்ததில்லை...
அந்த உள்ளத்தில், தன்னைத் தாண்டிய ஓர் யுத்தத்தை இதுவரை கண்டதில்லை..!
வேதனையின் வெப்பம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் எம்மையும் சுடுகிறது..
இந்த மரணம், இந்த மார்க்கத்துக்காக இயங்கும் உயிரோட்டம்மிக்க ஒரு மனிதனை அசைத்துவிடுமோ என்ற அச்சத்தில் அழுகை வருகிறது...!!
உயர்ந்த மனிதர்களை அந்த ரஹ்மான் உயர்ந்த சோதனைகளைக் கொண்டே புடம்போடுகிறான்...
உஸ்தாத் உங்களை ஆரத்தழுவி ஆறுதல் சொல்ல முடியாத தூரத்தில் இருக்கிறேன்..
எனது நீண்ட பிரார்த்தனைகளை இந்த மஸ்ஜிதுக்குள் வைக்கிறேன்.. அது நிச்சயம் உங்களைத் தொடும்..!
நீங்கள் நிச்சயம் உங்கள் மனைவியை இன்னுமோர் முறை உயிரோடு பார்ப்பீர்கள்...! அவர்களோடு நடந்து திரியும் சோலைகளை சந்திப்பீர்கள்..!
அல்லாஹ் அந்த சுவனத்தை அகலத்திறந்து தருவான்... !!
உங்கள் மனைவியை மண்ணறை வாழ்க்கைக்கு மக்கள் வழியனுப்பிய விதம்.. அந்த மனித மழை..
ஒரு அழகான வாழ்க்கையின் காத்திருப்பை கட்டியம் கூறுகிறது... இழப்பைத் தாண்டிய ஒரு பரிசை நிச்சயம் சுவனம் தரும்..!
சுடுகின்ற சூரியன் அந்தி சாயும்.... கவலைகள் கடந்து போகும்.. நீங்கள் மீண்டும் முழைப்பீர்கள்..!!
உங்கள் உறவாலும் உரைகளாலும் ஈமானைச் சரி செய்யும்.. ஆயிரம் ஆண்கள், பெண்கள் சிறார்களின் கண்ணீர் மல்கிய பிரார்த்தனைகள் வீணாகா..
அறியாத விதிகளால் அல்லாஹ் உங்களை பலப்படுத்தட்டும் !
வலிமை தரட்டும் !! அந்த சிரித்த முகத்தையும் சிவந்த மொழிகளையும், வயதை மீறிய வல்லமைகளையும் மீளத்தரட்டும் !!!
Br. Marikkar
Kingdom of Bahrain.

Post a Comment

0 Comments