அமெரிக்காவின் பெரும்பான்மை மக்கள் குழுவினர் ஒன்றிணைந்து டொனால்ட் டிரம்பின் வெற்றியை உறுதி செய்துள்ளனர். எனவே இலங்கையின் பெரும்பான்மை மக்களும் இதனை பாடமாகக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார்.
அதேநேரம், ஒபாமாவின் காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் இலங்கை மீது விடுக்கப்பட்ட அழுத்தங்கள் குறைவதற்கும் டிரம்பின் வெற்றி பங்களிப்புச் செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேராசிரியர் நவீன் டி சில்வாவின் எனது உலகத்தில் 30 வருடங்கள் என்று நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தனது வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்த டொனால் ட்ரம்பிற்கு தடையாக எதிரணி வேட்பானளருடன் தொக்கி நின்ற சிறுபான்மையினரே இருந்தனர்.அதனால் அவர் வெற்றி பெருவாரா என்பது கேள்விக்குரியாக இருந்தது.
இருப்பினும் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரது கொள்கைகளை வெ ளிப்படுத்தியுள்ளார். அவரின் அரசியல் கொள்கைகள் வரவேற்கத்தக்கவை. குறிப்பாக இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் எந்த பாதிப்புக்களும் ஏற்படாது.
இந்நிலையில் இலங்கை சந்தர்ப்பத்தில் உரிய விதத்தில் பயனடைய வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை இந்த சந்தர்ப்பத்தில் பயனடையும் வகையில் அமையுமா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
அத்துடன் அமெரிக்க வாக்களர்களின் பக்கத்திலிருந்து பார்க்கையிலும் அந்நாட்டு புத்திஜீவிகள் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கின்றபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பராக் ஒபாமாவின் ஆதரவு ட்ரம்பிற்கு கிடைக்கவில்லை. எனவே அவர் தோல்வி அடையப்போது உறுதி என்று குறிப்பிடப்படிருந்தது. அதேநேரம் கறுப்பினத்தவர்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்காது என்ற கருத்துக்கள் மிகவுத் வலுப்பெற்றிருந்தன.
ஆனால் அந்நாட்டு வெள்ளையின பெரும்பான்மையினர் ஒன்று திரண்டு டொனால் ட்ரம்பிற்கு வாக்களித்தன் காரணமாக அவர் சுலபமாக வெற்றிபெற்றார். இதனை இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களும் ஒரு பாடமாக கொள்ள வேண்டும். இதனால் உருவாக்கப்பட்ட கருத்தியலே மிக முக்கியமானதாகும்.
பெரும்பான்மை ஆதரவினால் மாத்திரம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். அது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை வலுப்பெற்றால் மாத்திரமே சிறுபான்மையினரும் வலுப்பெறுவர். இந்த சிறந்த பாடத்தை நாம் தற்போது அமெரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
அதேநேரம் ட்ரம்ப் என்பவர் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் போக்கிலிருந்து விடுபட்ட ஒருவர். அமெரிக்காவிலும் மக்கள் அரசியல் வாதிகளிடத்திலிருந்து தூரம் செல்கின்றனர். காரணம் அரசியல் தலைவர்கள் மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற முனைகின்றனர். மக்களை முட்டாளாக்கிவிடுவது இலகுவானது என்று எண்ணி அடுக்காக பொய்களை கூறி வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
இன்று எமது நாட்டிலுள்ள அமைச்சர்கள் கூறும் கருத்துக்களும் கூட எந்த வித அடித்தளமற்றதாகவும் வேடிக்கையானதாகவுமே உள்ளன.அதனால் மக்கள் அரசியல் வாதிகள் என்றாலே வெறுப்படையும் நிலை தோன்றியுள்ளது.
மேலும் மனித உரிமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் பேசப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. எமது நாட்டு மக்களிடத்தில் மனித உரிமைகள் இயல்பாவே நிறைந்துள்ளன. ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இல்லாத பல விடயங்களை மனித உரிமைகள் என்ற பேரில் எமது நாட்டினுள் புகுத்த பார்க்கின்றது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
அத்துடன் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது விடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவற்கு சாதகமான காரணியாகவும் டொனால் ட்ரம்பின் வெற்றி அமையும். ஒபாமாவின் காலத்தில் மனித உரிமை விவகாரம் பெரிதாக இருப்பதற்கும் ட்ரம்பின் வெற்றிக்கு தடையாக இருந்தவர்களே காரணம். அதனால் ஹிலாரியின் வெற்றிக்காக தேங்காய் உடைத்த கூட்டமைப்பினர் தற்போது தேங்காய் நீரை குடிக்கட்டும் என்றார்.


0 Comments