கான்பூர் அருகே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுக்கப்பட்ட சிறுவன் தந்தை தோளிலேயே உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இதே போன்ற சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.
கான்பூர் அருகே உள்ள பசல்கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மகன் அன்ஸ் (வயது 12). இவனுக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் இருந்தது.
உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். ஆனால் குணமாகவில்லை. எனவே கான்பூரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினார்கள்.
எனவே சுனில் குமார் தனது மகனை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். கடுமையான காய்ச்சலால் துடித்த அவனை தனது தோளில் சுமந்தபடி வந்திருந்தார்.
மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவனை அனுமதிக்க மறுத்துவிட்டனர். பக்கத்தில் 250 மீட்டர் தூரத்தில் குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு கொண்டு செல்லுங்கள் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
நிலைமை மோசமாக இருப்பதால் இங்கேயே அனுமதியுங்கள் என்று சுனில்குமார் டாக்டர்களிடம் மன்றாடினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
பக்கத்தில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு ஸ்டிரெச்சர் வசதி செய்து தரும்படி அவர் கேட்டார். அதற்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்யவில்லை.
இதனால் மகனை தோளில் சுமந்தபடி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சுனில்குமார் சென்றார். ஆனால் வழியிலேயே தந்தை தோளில் படுத்திருந்தபடியே சிறுவன் அன்ஸ் உயிரிழந்தான்.
குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவனை பரிசோதித்துவிட்டு அவன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மகன் பிணத்தை தோளில் சுமந்தபடியே சுனில்குமார் வீட்டுக்கு கொண்டு சென்றார்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


0 Comments