போக்கிமோன் கோ வீடியோ கேம்ஸ் விளையாடிய அமெரிக்காவை சேர்ந்த 62-வயது முதியவர் நள்ளிரவில் சேற்றில் சிக்கிய சம்பவம், இந்த விளையாட்டின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் செல்போன் திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ‘போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.
ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் இந்த ரியாலிட்டி கேமை ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும். நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாக காண்பிக்கும். அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றை பிடிக்க முடியும். இப்படித் தான் இதை விளையாட வேண்டும்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆப்ஸ் ஸ்டோர்களில் கிடைக்கும் ’போக்கிமோன் கோ’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கின் கோய்மான்ஸ் நகரத்தில் 62-வயது முதியவர் ஒருவர், நள்ளிரவு 2 மணியளவில் போக்கிமோன் கோ விளையாடியுள்ளார். போக்கிமோன் கோ விளையாட்டின்படி ஒரு குறிப்பிட்ட மான்ஸ்டரை பிடிப்பதற்காக அந்த முதியவர் தனது வீட்டிற்கு பின்னுள்ள சிறிய காட்டிற்கு சென்றுள்ளார்.
விளையாட்டில் மூழ்கியிருந்த முதியவர், சேறு நிரம்பிய புதை குழியில் தவறுதலாக இறங்கிவிட்டார். புதை குழியில் இடுப்பளவிற்கு கீழ் சென்றுவிட்டதால், முதியவரால் வெளியே வரமுடியவில்லை. இதனை அடுத்து அவரச உதவி எண்ணான 911-ஐ அழைத்துள்ளார். விரைந்து வந்த மீட்பு குழுவினர் முதியவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மிகவும் ஆபத்தான விளையாட்டு என போக்கிமோன் கோ வீடியோ கேம்ஸ் வெளியானது முதல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


0 Comments