Subscribe Us

இனம் பார்த்து வழிந்தோடிய இலங்கையின் வெள்ளம்

மூலம்: சுனந்த தேசப்பிரிய
எந்தவொரு நாட்டிலாயினும் ஐந்து இலட்சம் மக்கள் தற்காலிக இடம்பெயர்வுக்கு ஆளாக்கும் நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவது ஒரு துர்பாக்கியம். ஓங்கிப் பெய்த பெரு மழையில் பொங்கி வழிந்த வெள்ளப் பெருக்கினால் சரிந்த மண் திட்டுக்களுக்குள் புதையுண்டவர்களின் இறுதி மூச்சை ஒரு தேசம் சுமக்க நேருவது அதை விடக் கவலையான விடயம்.
ஆனால், நாம் முகம்கொடுத்த இந்த துயரமான நிகழ்வைக் கூட இதற்கு முன்னர் அனுபவித்த ஏனைய துயரங்களுடன் ஒப்பீடு செய்த சிலர் இந்த வெள்ளப் பெருக்கை சிங்கள வெள்ளமாகப் பார்த்த்தைக் காணக் கூடியதாக இருந்தது. இந் நிகழ்வுக்கு இரண்டு தினங்களின் பின்னர் கிளிநொச்சியை வெள்ளம் தாக்கியபோது அதை தமிழ் வெள்ளமாகப் பார்க்கப்படுவதும் காணக்கிடைத்தது.
இவை மட்டுமல்லாமல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைக் கூட இன ரீதியாகக் காண்பித்து மக்கள் மத்தியில் அவநம்பிக்கையையும் ஒற்றுமையின்மையையும் உருவாக்குவதற்கு சமூக ஊகங்களில் வெளிப்படையான முன்னெடுப்புக்கள் நடைபெற்றதையும் கண்டோம்.
இலங்கை தேசம் கடந்த மூன்று தசாப்த காலமாக பாரிய மனித அவலங்கள் பலவற்றுக்கு முகம்கொடுத்துள்ளது. இந்த சம்பவத் தொகுப்புக்களினால் வடிவமைக்கப்பட்ட எமது சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை ''பிரிவினைக் கோடு'' பதியப்பட்டுள்ளதை இந் நிகழ்வுகள் எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றன. என்ன துயரம் ஏற்பட்டாலும் அதனை இந்த பிரிகோடு கண்களினால் தான் பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் உடன் அரசியல் சந்தர்ப்பங்களாகின்றன. அவை அரசியல் ஆனவுடன் பிரிவு மனப்பாங்குடன் மறுவடிவம் பெறும் அரசியல் கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் சிறகுகள் பிறக்கின்றன.
சிலர், 2016 மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெயர்வுக்கு உள்ளான சிங்கள முஸ்லிம் மக்களை இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் வன்னி மக்களின் இடம்பெயர்வுடன் கிண்டலாக ஒப்பிட்டனர். நல்ல நோக்குடன் ஆயினும் சிலர் இவ்வாறு கேட்டனர், ‘இன்று வெள்ளப்பெருக்கினால் விபத்துக்கு உள்ளானர்கள் மீது தெற்கு மக்கள் காட்டும் உணர்வும் உதவியும் அன்று வன்னியில் மக்கள் செத்து மடியும்போதும் இடம்பெயரும்போதும் ஏன் காட்டவில்லை?’. உண்மையில் இது பொருந்தாத ஒப்பீடாகும். 2009 இல் யுத்த முடிவை பெரும்பான்மை சிங்களவர்கள் தமது இனத்தை அழிப்பதற்காக ஆயுதமேந்திய தீவிரவாத இயக்கமொன்றின் முடிவாகத்தான் பார்த்தனர். அதுமட்டுமன்று, அன்றைய ராஜபக்ஷகளின் ஆட்சி இவ்வாறான உணர்வுகளுக்கோ நிவாரண நடவடிக்கைகளுக்கோ இடங்கொடுக்கவுமில்லை.
2004 சுனாமிப் பேரலை பேரழிவு நிலை இதை விட முற்றிலும் வித்தியாசமானது. மிகக் குறைவாக பாதிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய சிங்கள மக்கள் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்தனர். யுத்த நிறுத்தம் நிலவிய 2003 இல் இரத்திணபுரியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது வன்னியின் தமிழ் மக்கள் வண்டிகள் நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தனர். நாம் முன்னுதாரங்களாகவும் வர்ணனைக்காகவும் எடுத்துக்கொள்ள வேண்டியவை இதுபோன்ற சாத்தியமான சந்தர்ப்பங்கள்தாம். ஒப்பீடு செய்ய வேண்டியதும் இவற்றைத்தான்.
கிளிநொச்சி வெள்ளம் பற்றிய செய்திகள் சிங்கள ஊடகங்களில் இருக்கவில்லை. அதுபற்றிய செய்திகள் சிங்கள சமூக ஊடகங்களில் இருக்கவேயில்லை. தெற்கின் வெள்ள அனர்த்தத்தைக் காட்டுவதற்காக வெள்ளம் தொடர்பான ஒளிப்படங்களைப் பாவித்து செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
வெளிநாடுகளில் இருந்து வெளியிடப்படும் இலங்கையில் ஈழம் அரசுக்காக குரல்கொடுக்கும் தமிழ் சிங்கள டயஸ்போரா வலைத்தளங்கள் ஜந்து இலட்சம் மக்கள் விபத்துக்குள்ளான இத் துயரச் சம்பவத்தை முற்றாக அலட்சியம் செய்திருந்தனர். விபத்துக்குள்ளானவர்கள் இவர்கள் எதிர்பார்க்கும் ஈழம் அரசின் எல்லைக்கு வெளியில் வாழ்வதனாலோ என்னவோ இம் மக்களைப் பற்றிய ஒரு வரியைக் கூட இந்த வலைத்தளக்காரர்கள் எழுதவில்லை. இன்னும் சில வலைத்தளங்கள் கிளிநொச்சி வெள்ளத்தை மட்டும் எழுதின.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் தினந்தோறும் குரல்கொடுக்கும் வெளிநாட்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை முகங்கொடுத்த மனித அவலத்தைப் பற்றி வாய்கூட திறக்கவில்லை. தப்பித்தவறி இந் நிலைமை வடக்குக் கிழக்கில் நிகழ்ந்திருந்தால் இவர்கள் இராப் பகல் பாராமல் ஒப்பாரி வைப்பதைக் கேட்டிருக்கலாம். இவர்களைப் பின்பற்றுவதனாலோ என்னவோ குறிப்பாக தமிழ் மக்களின் மனித உரிமை இழகப்புக்களை மிகச் சிறப்பாக வெளியிடும் சில உள்நாட்டு மனித உரிமைக்காரர்களுக்கும் இவ்வாறான விபத்தொன்று இலங்கையில் நடந்திருப்பதைக் காணவில்லை.
இந்தப் பிரிவு மனப்பான்மை இலங்கையில் வாழும் இனங்களுக்கு மத்தியில் அந்நியோன்ய நம்பிக்கையின் மீது சகவாழ்வைக் கட்டியெழுப்புவது எவ்வளவு கடினமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அது எந்தளவுக்கு கஷ்டமானது எனின், ஐந்து இலட்சம் மக்களை விபத்துக்கு உள்ளாக்கிய பெரும் வெள்ள அனர்த்தம் கூட மனித அவலமாக அல்லாமல் தமிழ் அல்லது சிங்கள வெள்ளமாகப் பார்ப்பதில் இருந்து தெளிவாகின்றது.
உண்மை என்னவெனில், வெறும் இலாபத்தை மட்டும் நோக்கமாகக்கொண்ட வர்த்தக ஊடகங்களில் இருந்து அன்றாட சூடான செய்திகளை விற்பனை செய்வதற்கு அப்பால் ஊடக பயன்பாட்டை எதிர்ப்பார்க்க முடியாது என்பதாகும். இலாபம் இல்லாவிட்டாலும் அரசியல் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் அரச ஊடகங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களின் முதுகைச் சொறியும் சிலருக்கு தொழில் வழங்கும் இடங்கள் மட்டுமே.
ஜனாதிபதி சிரிசேன கூறியது ஒருவகைக்கு சரியானது, ‘இன்றைய அரசியல் பரிணாமத்தில் காணப்படும் மிகப் பாரிய பலவீனம் தொடர்பாடல் இயலாமை ஆகும்’. மண்சரிவுகளும் வெள்ளமும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழில்: ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்

Post a Comment

0 Comments