Subscribe Us

வழிகாட்டி சமூகம் வாழ்ந்து காட்ட வேண்டும்.


அனீஸ் பின் அலி முஹம்மத்

முஸ்லிம் சமூகமாகிய எமது சமூகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவாறான சவால்களையும், எதிர்ப்புகளையும் கடந்து வந்துள்ளதென்பதை உலக வரலாறுகளைத் தூசி தட்டிப் பார்க்கின்ற  போது தெளிவாகின்றது. வெறுமனே சுயலாபங்களுக்ககவும் பலதரப்பட்ட குரோதங்களை பழிதீர்க்கும் வகையிலுமே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

உலக நாடுகளாகட்டும் நாம் வாழ்கின்ற இலங்கைத் திருநாடாகட்டும்  அனைத்து வட்டங்களிலும் நசுக்கப்படும் சமூகமாக எமது சமூகம் மாறி வருகின்றது. இவ்வாறான நசுக்கல்கள் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க விழுமியங்கள் சார்ந்தவைகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. பலஸ்தீனில் அல்-அக்ஸா மஸ்ஜிதை மையமாக வைத்து இஸ்ரேல் போடும் நாடகம், சீனாவில் நோன்பை மையமாக வைத்து மக்களை சீன்டும் சீனா, பள்ளிவாயல்கள், ஹலால், மற்றும் அல் குர்ஆனை நிந்தனை செய்து விளையாடும் பொதுபலசேனா, மற்றும் உயிரிலும் மேலான தூதரை இழிவுபடுத்தி எள்ளி நகையாடும் பிரான்ஸ் என பட்டியல் தெரிந்ததும் தெரியாததுமாக நீளுகின்றது.

இலங்கையில் சிறுபான்மையாக வாழக்கூடிய நாம் எமக்கான எதிர்ப்புகளும் சவால்களும் உக்கிரமடையும் சந்தர்ப்பங்களின் போது நாம் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அமைதியும் சமாதானமும் ஒருங்கேபெற்றே தூய மார்க்கத்தில் வளரும் நாம் சில்லரைப் பிரச்சினைகளின் போது கூட சாரன் மடித்துக் கட்டுபவர்களாக இருக்கக் கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது நாம் சிறுபான்மையாக நாம் வாழக்கூடிய இந்த நாட்டிலே மிகவும் பாரதூரமான விளைவுகளை கொண்டு சேர்க்கும். 

இன்றைய காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து பல்வேறு செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பொதுபலசேனா, சிங்கள ராவய அமைப்பு போன்ற இன்னோரன்ன சில தனிப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் நபர்களாலும் செயற்படுத்தப்படுகின்றன. இவ்வாறான எதிர்ப்புகள் சமூகத்தைச் சீண்டிப் பார்க்கின்ற போது நாம் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதை முஸ்லிமாக இந்த நாட்டிலே வாழக்கூடிய ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பாக இளைஞர் சமூகம் இதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். சில எதிர்ப்புகள் மார்க்கத்தையும் சமூகத்தையும் பதம் பார்க்கின்ற போது பொறுமைமிக்கவர்களாக நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தை மையப்படுத்தி சில விஷமிகள் செய்யும் பொருளில்லா செயற்பாடுகளுக்கு நாம் விளக்கம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.

சிங்கள பெரும்பான்மை சகோதர சமூகத்தைப் பொறுத்த வரை ஒரு சில அமைப்புக்களைக் கொண்டு சில தனிப்பட்ட நபர்களே இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் வாழக்கூடிய பெரும்பான்மை முழு சமூகமுமே முஸ்லிம் சமூகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கல்லர் மாறாக நாம் அறியாத பல நல்லுள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு தாய்க்குப் பிறக்கும் அனைத்து குழந்தைகளுமே ஒரே விதமான குணாதிசயங்களைக் கொண்டிருக்குமென நாம் நம்பிக் கொண்டிருப்பது மடத்தனம்.

ரமழான் காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து பல்வேறு வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிரீஸ் மனிதன், ஹலால் பிரச்சினைகள், பள்ளிவாயல் பிரச்சினைகள், மற்றும் மார்க்க விழுமியங்கள் மீதான காழ்ப்புணர்வு என கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவ்வாறா சந்தர்ப்பங்களில் நாம் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். 

ஒரு தனிப்பட்ட மனிதனோ அல்லது ஒரு சமூகமோ இன்னொரு தனி மனிதன் மீதோ அல்லது மற்றொரு குழுவின் மீது காழ்ப்புணர்வு காட்டுகின்றதென்றால் அந்த சமூகம் கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம் என ஒரு விடயத்திலோ அல்லது அனைத்து விடயங்களிலுமோ ஏனைய சமூகங்களை விட முன்னேறிச் செல்கின்றதேன்றால் மிகையாகாது.

எனவே, முஸ்லிம் சமூகமாகிய நாம் சமூக கட்டமைப்புக்களிலுள்ள அனைத்து மட்டங்களிலும் ஏனைய சமூகங்களை விடவும் முன்னிலை வகிக்கின்றோம் என்பது எமைச் சுற்றி நாளாந்தம் நடக்கும் பல்வேறு குரோத செயல்களை வைத்துப் பார்க்கின்ற போது மிகத்துள்ளியமாகத் தெரிகின்றது. எனவே, ஏதோ குரைக்கின்றதென அறிந்து நாமும் திருப்பிக் குரைப்பதென்பது எமது மதிப்பைத் தாழ்த்தி விடும் செயாலாகும். வளர்ச்சி என்பது காழ்ப்புணர்வுகளை விதைக்கும் நிலம் என்பது நாமறிந்த உண்மை.

இந்த யதார்த்தமே இன்றைய கால கட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டப்படுகின்ற காழ்ப்புணர்வுகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு தக்க காரணமாகும். நபி (ஸல்) அவர்களது காலத்தில் அவர்கள் எதிர் நோக்கிய சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மா நபியும் மாற்றமாக எதிர்ப்புக் காட்டுபவராக இருந்ததில்லை. பொறுமைகாத்தார்கள் அன்பே உலகை வெல்லும் என் வாழ்ந்தும் காட்டினார்கள். வாளேந்தும் தருணங்களிலும் அவமானம் அகல விரித்தாடிய தருணங்களிலும் கூட பொறுமை காத்தார்கள். எனவே மா நபியின் வழியில் வந்துதித்த நாமும் அதனை பின்பற்றினால் நலவையன்றி வேறதுவும் நடக்கப் போவதில்லை.

இறைவனே போதுமானவன்.

‘நிச்சயமாக பொறுமையாளர்களுடனே இறைவன் இருக்கின்றான்” (அல் குர்ஆன்)

Post a Comment

0 Comments