பேரினவாதத்தின் செல்லப் பிள்ளை ஞானசாரவைக்
கொண்டு தனது இருப்பைப் பலப்படுத்திக் கொள்ள முயன்ற மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்று
ஒன்றரை வருடங்களே ஆகியுள்ள நிலையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சவை நினைவூட்டி, மக்களுக்கு அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கச்
செய்து தம்மை நல்லாட்சியாளர்களாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது
மைத்ரி அரசு.
ஒவ்வொரு தடவையும் இந்த 'பேரினவாத' விளையாட்டுக்கு முஸ்லிம்களைப் பலி கொள்வதானது
எவ்வகையிலும் அனுமதிக்க முடியாத ஒன்றாகும்.முஸ்லிம்கள் தமக்கிழைக்கப்பட்ட
அநீதிக்கு எதிரான தற்காலிக தீர்வினை எதிர்பார்த்து அலையெனத் திரண்டு மைத்ரிபால
சிறிசேனவை ஆதரிக்கவில்லையென்பது அரச உயர் மட்டத்தினால் உணரப்படவில்லையென்றால் அதனை
உணர்த்தும் பொறுப்பைத் தாமதமின்றிச் செய்வதன் அவசியத்தை பாராளுமன்றை மீண்டும் ஒரு
தடவை எண்ணிக்கையாலும் அமைச்சுப் பதவிகளாலும் அலங்கரித்திருக்கும் முஸ்லிம் அரசியல்
பிரதிநிதிகள் உணர வேண்டும்.
தேசிய ஒற்றுமையினதும் அபிவிருத்தியினதும்
பங்காகவே இருக்க விரும்பும் முஸ்லிம் சமுதாயம் இன ஒற்றுமை, ஐக்கியம் வெறுப்பூட்டலுக்கு எதிரான துரித
நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய திராணியுள்ள அரசை விரும்பியே மைத்ரியையும் பின்
ரணில் தலைமையிலான பாராளுமன்றையும் அங்கீகரித்தார்கள்.
மஹிந்த அல்லது மைத்ரி எனும் இரண்டு
பொறுப்பாளிகளில் யாரைத் தெரிவு செய்வது எனும் கேள்வியை முன் வைத்தால் இன்னும்
மைத்ரியே எனும் நிலைப்பாடே காணப்படுகின்ற நிலையில் அதனை சாதகமாகப் பயன்படுத்தி
மீண்டும் ஸ்ரீலங்கா பொலிஸ் மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளமை நல்லாட்சியும் மட்டமான
அரசியல் நிலைப்பாட்டுக்குச் சென்று கொண்டிருப்பதை வேதனையுடன்
சுட்டிக்காட்டுகிறது.பொலிசாரின் புறக்கணிப்பைத் தாங்க இயலாத நிலையில் மனித
உரிமைகள் ஆணைக்குழு நாடப்பட்டுள்ளமை இந்த அரசின் புறக்கணிப்பை எடுத்தியம்புகின்ற
அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகார எல்லையும் வரையறையும் இலங்கை
அரசியலில் அது செலுத்தக் கூடிய ஆளுமையும கேள்விகுட்படுத்தக் கூடியவை.
பொலிசாரின் அசமந்தப் போக்கை பொலிஸ் ஆணைக்குழு
ஊடாக எதிர்கொள்ள வேண்டிய தேவை மறக்கப்பட்டிருக்கும் அதேவேளை இங்கு எந்த ஒரு
பிரச்சினைக்கும் 'அறிவுரை' வழங்கவும் ஒவ்வொருவரும் அவர், இவர் ஏன் செய்யவில்லையெனவும் கேட்பதற்குச்
செலவிடும் ஒரு கணத்தைக் கூட ஏன் நாம் அதற்காக எதையும் செய்யவில்லையென்று
சிந்திப்பதில்லை.
மஹிந்த அரசில் ஞானசாரவுக்கு எதிரான உணர்வலை
இருந்ததே தவிர அவருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்ய ஒரு கட்டம் வரை யாரும்
முன் வந்திருக்கவில்லை.இந்த அரசிலும் அன்யோன்யமாக இருக்கும் இந்த நேரத்தில் அதற்கு
முஸ்லிம்கள் தயாராக இல்லையென்றாலும் சர்வதேசம் அவதானித்துக் கொண்டிருக்கும்
இவ்வேளையில் ஆகக்குறைந்தது முறைப்பாட்டாளர்களாகக் கூட முன் வராத நிலையில் சமூகம்
இருக்குமாக இருந்தால் மீண்டும் இனவாதிகளுக்கு எதிராக சட்டம் இயங்காமல் இருக்க
நாங்களும் காரணமாகி விடுவோம்.
தாம் அங்கம் வகிக்கும் பாராளுமன்றில்
இப்பிரச்சினைகளை பேசாத நிலையில் திடீரென சர்வதேச நாடுகளை அணுகி முறையிடச் செல்வது
இனவாதத்தின் இன்னொரு பக்கமேயன்றி வேறு எதுவுமில்லை.
கடந்த கால பிரச்சினைகளின் போது முஸ்லிம்
நாடுகளின் கூட்டமைப்பு ஒரு கடிதம் அனுப்புவதோடு தனது வரலாற்றுப் பங்கை நிறுத்திக்
கொண்டது.
அதைத் தவிர அந்நாடுகளின் பிராந்திய அரசியல், வர்த்தக கூட்டுறவு முதல் அனைத்து ராஜதந்திர
உறவுகளையும் மீறி கற்பனையால் காணப்படும் எதுவும் நடக்கப் போவதில்லை.எனவே, ஜனநாயகத்துக்காகப் போராடி மைத்ரி - ரணிலிடம்
ஆட்சிப் பொறுப்பைக் கையளித்த சமூகம் அதே ஜனநாயகத்தையும் உரிமைகளையும் போராடித்
தான் பெற வேண்டும் எனும் நிலை வரும் போது அதற்கும் தயாராக வேண்டும்.
ஆனாலும் இன்று பல பதவிகளையும் சுக
போகங்களையும் தாராளமாக அனுபவித்து வரும் நிலையில் இதற்கான போராட்டங்களை சிவில்
சமூகமே கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப்படுவது திண்ணம்.எல்லாம் வல்ல நாயன் நமக்கு
நல் வழி காட்டுவானாக!
-இர்பான் இக்பால்


0 Comments