Subscribe Us

படிப்பதற்கு வயது தடையில்லை: பள்ளிக்குச் செல்லும் 68 வயது மாணவர்!- படங்கள்


பேரப் பிள்ளைகளை காலையில் எழுப்பி, அவர்களை பல் துலக்க வைத்து, குளிக்க வைத்து, சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பும் தாத்தா, பாட்டி பலர் உள்ளனர். ஆனால், நேபாளத்தை சேர்ந்த ஒரு முதியவர், அதே காலை பரபரப்புடன் பள்ளிக்கு படிக்க செல்வது குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி உள்ளது. 

நேபாளத்தை சேர்ந்தவர் காமி. 68 வயதாகும் இவர், 10 ம் வகுப்பு படிக்க, தினமும் பள்ளிக்கு செல்கிறார். இவருக்கு ஆறு பிள்ளைகளும், 8 பேரப் பிள்ளைகளும் இருக்கின்றனர். எனினும், சிறு வயதில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தியதால், நிறைவேறாத அந்த ஆசையை தீர்க்க தற்பொழுது பள்ளிக்குச் செல்வதாக அவர் கூறியுள்ளார். 

அவரது மனைவி இறந்த பின்பு, சில நாட்களில் தன் பிள்ளைகளும் தன்னை விட்டுச் சென்று விட்டதாகவும், இது போன்ற துக்கங்களை மறைப்பதற்காக பள்ளிக்குச் செல்வதாகவும் கூறினார். முதலில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள முதன்மை பள்ளிக்கு சென்ற அவர், பிறகு, உதவித் தொகை பெற்று மேல்நிலை பள்ளிப் படிப்பை தொடர,  மேல்நிலை பள்ளியில் இணைந்தார். அவருக்கு இலவச சீருடையும், படிக்கத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன.

நடப்பதற்கு "walking stick" பயன்படுத்தும் அவர், வாலிபால் விளையாடத் தயங்குவதில்லை. முதலில் அவரிடமிருந்து சற்றே விலகியிருந்த மாணவர்கள், காலப்போக்கில் அவருடன் நட்பு பாராட்டத்துவங்கி, அவரை அப்பா எனக் கூப்பிடும் அளவுக்கு நெருங்கியுள்ளனர்.

இதைப் பற்றி அவர் "நான் இந்த வயதிலும் பள்ளிப் படிப்பை படிக்க முயலுவது பல மாணவர்களுக்கு படிக்க உந்துதலாக அமையலாம். என் உயிருள்ள வரை படிப்பை தொடரப் போகிறேன்" எனக் கூறுகிறார்.



Post a Comment

0 Comments