Subscribe Us

புத்தகங்களை பாதுகாப்பது எப்படி?


புத்தகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன.

நல்ல புத்தகம், நல்ல நண்பன். ஒருவர் படிக்கும் புத்தகங்களின் அடிப்படையில் அவருடைய பழக்க வழக்கங்கள் இருக்கும்.

புத்தகங்கள் அரிய பொக்கிஷ நகல், புத்தகங்கள் வாங்குவதைவிட அவற்றை பாதுகாப்பது கடினமான காரியம். பொதுவாக புத்தகங்களை அதற்கென்று தனியாக ஒரு அலமாரியில் ஒதுக்கி வைக்க வேண்டும். அலமாரிகளில் அடுக்கினால் மட்டுமே புத்தகங்களின் முனைகள், விளிம்புகள் மடங்காமல் இருக்கும். விளிம்புகள் மடங்கினால் அந்த இடங்கள் நாளடைவில் கிழிய வாய்ப்புள்ளது. அலமாரியில் அடுக்கும் போது தூசி, பூச்சிகள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அலமாரியில் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைக்கலாம்.

புத்தகங்களை அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் அடுக்கி வைப்பது நல்லது. ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும். படிக்கும் போது கைகளில் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் எண்ணெய் பசை, அழுக்கு போன்றவை இருந்தால், அவை புத்தகத்தில் படிந்து காலப்போக்கில் எழுத்துகள் அழிய வாய்ப்புண்டு. புத்தகங்களின் விளிம்புகளை அடையாளத்துக்காக மடிக்காமல், அதற்கு பதில் கயிறு, அல்லது சிறு அட்டைகளை வைத்து அடையாளம் ஏற்படுத்தலாம்.

புத்தகங்களில் இருந்து பூஞ்சை வாசம் வந்தால், ஒரு சிறிய காலிப் பெட்டியில் சமையல் சோடாவுடன் சிறிய பேப்பர் துண்டுகளையும் கலந்து ஒரு வார காலத்துக்கு புத்தகங்கள் வைத்துள்ள அலமாரியில் வைத்தால் அவற்றில் இருந்து வரும் கெட்ட வாடை நீங்கும். அடிக்கடி உபயோகப்படுத்தும் புத்தகங்கள், அதிகம் பயன்படுத்தாத புத்தகங்கள் என்று வரிசைப்படுத்தி அடுக்குவது சிறந்தது. அடிக்கடி பயன்படுத்தாத புத்தகங்களை தனித்தனியாக பாலிதீன் பேப்பர்களில் உறையிட்டு வைக்க வேண்டும்.

பழைய புத்தகங்கள் தொட்டவுடன் கிழிய வாய்ப்பு உள்ளது. இத்தகைய புத்தகங்களை கவனமாக கையாள வேண்டும். இவற்றை டிஜிட்டல் முறையில் நகல் எடுத்து, படம் பிடித்து சேமித்தும் வைக்கலாம்.

புத்தக அலமாரியில் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது. அலமாரிகளை அடிக்கடி சுத்தம் செய்வது மிக அவசியம். புத்தகங்களை காப்பது என்பது செல்வங்களை சேமிப்பது போன்றதாகும். புத்தகங்களில் பொதிந்துள்ள கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமையாகும்.

Post a Comment

0 Comments