பாண் என்றாலே எங்கள் நாட்டின் ஆட்சிக்காலம் பற்றி நினைவுக்கு வரும். சிறிமா அம்மாவின் காலத்தில் பாணுக்கு வரிசையில் நின்று கால் கடுத்த அந்த நிலையை இப்போதும் நம்மவர்கள் சொல்லிக் கொள்வர்.
பாணுக்கு வரிசையில் நிறுத்தியதால் ஆட்சி கவிழ்ந்த வரலாறும் இருக்கிறது. அதேநேரம் அம்மா பசிக்கிறது பாண் தாருங்கள் என்று சின்னஞ்சிறுசுகள் விட்ட கண்ணீர், அந்தப் பாண் படுத்திய பாடு எத்தன்மை என்பதை புரியவும் முடியும்.
இதேவேளை மூன்று ரூபாயுக்கு பாண் தருவேன்; என்னை ஆட்சியில் இருத்தினால் என்று சிறிமாவோ பண்டாரநாயக்கவின் புத்திரியாகிய சந்திரிகா குமாரதுங்க முழங்க, மக்கள் அவரை ஜனாதிபதியாக்கியதும் நடந்து முடிந்த உண்மை.
மூன்று ரூபாயுக்கு பாண் வாங்குதல் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாக இருந்த போதிலும் அந்த மலிவு நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை.
எதுவாயினும் இந்த நாட்டில் ஆட்சியை இறக்கவும் சிம்மாசனத்தில் இருத்தவும் பாணால் முடிந்தது என்ற உண்மையை மட்டும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
பாணின் விலை அதிகரிப்பும், பாணின் தட்டுப்பாடும் ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவில் முதன்மை பெற்றுள்ளது என்றால்,
ஏழை மக்களின் சீவனோபாயத்துடன் பாண் கொண்ட உறவு எத்தகையது என்பதை விளங்கிக் கொள்வதில் கடினமிருக்க முடியாது.
இந்நிலையில் பாணின் விலையை நான்கு ரூபாயாலும் பாணின் மூலப்பொருளாகிய கோதுமை மாவின் விலையை ஏழு ரூபாய் ஐம்பது சதத்தாலும் அதிகரிப்ப தென்பது நியாயமானதா? என்பதை அரசு ஆராய வேண்டும்.
மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரை, பாண் ரொட்டி என்பன இறைச்சியை உண்பதற்கான அனுமானப் பொருள்.
ஆனால் எங்கள் நாட்டில் பாண் என்பது ஏழைகளின் உணவுப் பொருள் என்ற எல்லை கடந்து இயந்திரமாக மாறிவரும் மனித வாழ்வில் ஒரு ரெடிமெட் உணவாகவும் பாண் இருப்பதால் இது ஒரு தேசிய உணவு என்ற தகைமை நிலையில் மக்களால் நுகரப்படுகிறது.
இந்நிலையில் பாணின் விலையை அதிகரிப்பது என்பது மக்களின் நிலைமைகளை புரிந்துகொள்ளாத செயற்பாடு என்று கருதவேண்டும்.
இதற்கு மேலாக அரிசியின் நுகர்வை அதிகரிப்பதற்காகவே பாணின் விலை அதிகரிக்கப்பட்டது என்ற நிதி அமைச்சரின் கூற்று, பொருளியல் கோட்பாட்டின் நேரடிக் கருத்தேயன்றி அதிலிருக்கக் கூடிய யதார்த்தம் ஆராயப்படவில்லை என்பது தெரிகிறது.
ஆக, எடுத்த எடுப்பில் பாணின் விலையை கூட்டுவது ஏழை மக்களின் சீவனோபாயத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதால் இது தொடர்பில் அரசு நிதானமாக ஆராய வேண்டிய தேவையுள்ளது.
நெல் உற்பத்தியின் அதிகரிப்பின் பயனாக அரிசியின் நுகர்வை அதிகரிப்பதற்கான ஓர் உபாயமாக பாணின் விலையை உயர்த்துவதென்பது மக்களின் நுகர்வை இடமாற்றும் என்பதுக்கு பதிலாக மக்களிடம் ஒரு மனவருத்தத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
அதாவது பாணின் நுகர்வுக்கு பழக்கப்பட்ட மக்கள், பாணின் நுகர்வால் உணவு தயாரிக்கும் நேரத்தை மீதப்படுத்தும் மக்கள், பாணின் விலை அதிகரிப்பை ஜீரணிக்கமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்.


0 Comments