மஹிந்த அணி புதிய கட்சி அமைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதென்பது அரசாங்கத்திற்கு ஒரு சவால் அல்ல. நாட்டு மக்கள் இன்று அச்சமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர். எனவே அச் சுதந்திரத்தை மீள இழப்பதற்கு மக்கள் தயாராக மாட்டார்கள் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரவி கருணாநாயக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய கட்சியொன்றை அமைத்துப் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளனர். இது அரசுக்கு ஒரு சவால் அல்ல.
மீண்டும் நாட்டை ஊழல் மோசடிகள் நிறைந்த யுகமாக மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம். இம் முறை தைப் பொங்கல் திருநாள் நாட்டில் அனைத்து மக்களும் உண்மையான இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் வாழும் நிலையிலேயே கொண்டாடப்படுகின்றது. இதற்கான ஜனநாயகத்தை நாம் வெற்றி கொண்டோம். அந்த ஜனநாயகம் இன்று பாதுகாக்கப்படுகின்றது.
நாட்டில் அனைத்து மக்களும் இன்று இலங்கையர்களாக வாழும் அடித்தளம் போடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மக்களின் சட்டைப் பைகளில் இருந்தவைகள் கொள்ளையடிக்கப்பட்டன. எனவே இவ்வாறானவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு மக்கள் தயாராக இல்லை.
ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுப்பதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். நாட்டை அழித்து ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடும் யுகத்திற்கு இன்று முடிவுகட்டப்பட்டுள்ளது. மக்கள் இன்று அச்சமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர்.
எனவே, மீண்டும் இவ்வாறான யுகத்தையும், வெள்ளைவேன் கலாசாரத்தையும் ஏற்படுத்த மக்கள் முயற்சிக்க மாட்டார்கள். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டணியும் எந்தக் கட்சியில் தேர்தலில் களமிறங்கினாலும் தோல்வி நிச்சயமாகும் என்றார்.


0 Comments