Subscribe Us

header ads

வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் துயரம் முடிவுறுமா?

நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்பவர்களின் கதை துயரம் தோய்ந்த கதையாக நெருக்கடி மிக்க நிலையாக காணப்படுகின்றது. குடும்ப வறுமை, பொருளாதாரப் பின்னணி, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என பல்வேறு பிரச்சினை காரணமாக பெண்கள் வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்ணாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நாட்டில் வடகிழக்கு மாகாணங்களில் இருந்தே அதிக பெண்கள் வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்ணாக செல்கின்றனர். குறிப்பாக யுத்தம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் இவ்வாறு செல்ல நேரிடுகின்றது. மீள முடியாத வறுமை மற்றும் பொருாளாதார நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு வெளிநாடுகளிற்கு பணிப்பெண்ணாக செல்கின்றனர்.

குழந்தைகளை பிரிந்து, குடும்பத்தை பிரிந்து, தாய் மண்ணை பிரிந்து இந்தப் பெண்கள் செல்கின்றனர். சொந்த ஊரிலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்லாதவர்கள் முற்றிலும் வேறுவிதமான பண்பாடு கலாசாரச் சூழலில் கால நிலை சூழலில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர். இதனால் மிக மிக மனத்திற்கு அழுத்தத்தை உருவாக்கும் புறநிலைகளில் வாழ நேரிடுகிறது. 

வடகிழக்கிலும் கிழக்கு மாகாணத்தில் இருந்தே அதிக பெண்கள் செல்லுகின்றனர். முஸ்லீம் சமூகத்தில் இருந்தும் அதிகளவான பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் கடந்த 2014இல் மாத்திரம் 14871 பெண்­களும் 2015ஆம் ஆண்டு சுமார் 15000 பெண்களும் வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்றுள்ளனர். இதுதான் கிழக்கு மாகாணத்தில் பெண்களை நிலையை நமக்கு அதிர்ச்சிகரமாக புலப்படுத்துகின்றது. 

இந்த எண்ணிக்கை சாதாரணமானதல்ல. கிழக்கு மாகாணத்தில் போரால் பெண்கள் என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பதை காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தில் பெண்களின் கல்வியும் தொழில்வாய்ப்பும் எப்படி இருக்கிறது என்பதை காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் பெண்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த நிலையையும் காட்டுகிறது. 

அப் பெண்கள் தமது பணியிடங்களில் சந்திக்கும் நெருக்கடிகள் மிகவும் கொடுமையானவை. இதற்கு எவராலும் மறக்க முடியாத சாட்சி ரிசானா. ரிசானா நபிக்கை அவ்வளவு எளிதாக மறக்க இயலாது. மனிதக் கொலை புரிந்ததாக கூறி சவுதி அரேபியாவில் மரண தண்டணை நிறைவேற்றப்பட்ட 24 வயதுப் பெண். ஒரு ஏழைக் குடும்பத்திற்காக பணிப்பெண்ணாக சென்ற பெண்.

கிழக்கிலிருந்து சென்ற தாய்யொருவர் தாய்நாடு திரும்பியபோது நடக்க முடியாதளவில் அடித்துக் கால் முறித்து அனுப்பட்டார். கடந்த வருடம் இந்த சம்பவம் நடந்தது. ஒரு முதுமை வயதை நெருங்கும் தாய் என்றுசூட பார்க்காமல் தன்னை பாலியல் நோக்கத்திற்காக வற்புறுத்தியே துன்புறுத்தியதாக அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள ஊடகங்களுக்கு சவுதி போன்ற நாடுகளில் இருந்து பெண்கள் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு தம்மை காப்பாற்ற நடவடிடிக்கை எடுக்குமாறு அழுவதாக சில ஊடக நண்பர்கள் சொல்கிறார்கள். அங்கே தாம் அடைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தம்மை மீட்காவிட்டால் கொல்லப்படுவோம் என்றும் அச்சத்துடன் பேசியதாக கூறினர்.

அண்மையில் சவுதியிலிருந்து கிளிநொச்சியை சேர்ந்த ஒரு பெண் நாடு திரும்பியிருந்தார். பெண் தலைமைத்துவக்குடும்பத்தை சேர்ந்த அவர்தான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். வருமானம்போதாது என்று சவுதிக்குச் சென்றார். இனிமேல் அந்தப் பக்கம் போவதில்லை என்றார். தன்னை அவ்வப்போது அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டார். 

சில மாதங்கள் உழைத்து வந்த பணத்தில் குடும்ப செலவுகளில் ஈடுபட்டார். பின்னர் வறுமைய மீளவும் ஏற்பட பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் சேர்த்துவிட்டு சவுதிக்குச் சென்றுவிட்டார். வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செ்லலும் பெண்களின் துர்ப்பாக்கிய நிர்பந்தம் இதுதான். இது எவ்வளவு கொடுமையானது. அங்குள்ள சூழ்நிலை தெரிந்தும் வேலைக்குப் போகத் துணியும் ஒரு நிலைக்கு குடும்ப நிலை - பொருளாதார நிலை நிர்பந்திக்கிறது. 

வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்ணாக செல்லும் பெண்கள் பிரதேச செயலகத்தில் குடும்ப அறிக்கையை பெறத் தேவையில்லை என்ற நடைமுறை வருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் இனி கைக்குழந்தைகளைக்கூட விட்விட்டு பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும். பிரதேச செயலக குடும்ப அறிக்கை வெளிநாடுகளுக்கு பெண்கள் செல்வதை கட்டுப்படுத்தி வந்தது. இந்த நிலையில் இதனை நீக்குவது மேலும் சிக்கல்களை உருவாக்கும்.

ஆனால் எதிர்வரும் 2017ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு பெண்ணும் பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக தடுப்போம் என்றும் அவர்களுக்காக வேலை வாய்ப்புக்களை இங்கே ஏற்படுத்திக் கொடுப்போம் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் அதிகம் முகம் கொடுக்கும் கிழக்கிற்கு இது நம்பிக்கை ஊட்டும் கருத்து. 

இதேவேளை வடக்கிலும் இவ்வாறு வெளிநாடுகளுக்கச் செல்லும் பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் தொழில் நிலையங்களை வடக்கு அரசு உருவாக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இவ்வாறான தொழில் வாய்ப்புக்கள் அவசியமானவை. அவர்களின் மறுவாழ்வுக்கு அடிப்படையாய் அமையும்.

பார்த்தீபன்

Post a Comment

0 Comments